பசவராஜ் பொம்மை குறித்து அவதூறு கருத்து; எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா விளக்கம்

பசவராஜ் பொம்மை குறித்து அவதூறு கருத்து; எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா விளக்கம்
x

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குறித்து அவதூறாக பேசியது பற்றி எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார். அவர் பறவை, விலங்குகளுடன் மனிதர்களை ஒப்பிடுவது இயல்பு என்று கூறியிருக்கிறார்.

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குறித்து அவதூறாக பேசியது பற்றி எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார். அவர் பறவை, விலங்குகளுடன் மனிதர்களை ஒப்பிடுவது இயல்பு என்று கூறியிருக்கிறார்.

திட்ட வேண்டும்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை நாய்க்குட்டியுடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசினார். அவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜனதா தலைவர்கள் மற்றும் மந்திரிகள் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் தான் கூறிய கருத்து குறித்து சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி முன்பு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பயப்படுகிறார் என்ற அர்த்தத்தில் தான் நாய்குட்டி போல் நடுங்குகிறார் என்று கூறினேன். எனது இந்த கருத்தை தேவையின்றி சர்ச்சையாக்கி உள்ளனர். அவரை தனிப்பட்ட முறையில் திட்ட வேண்டும் என்று நான் அந்த கருத்தை கூறவில்லை. பறவை, விலங்குகளை மனிதர்களுடன் ஒப்பிட்டு பேசுவது மனித இயல்பு.

ஆட்டுக்கிடா

புலி, மனிதர்களை கொன்று சாப்பிடும் விலங்கு. எயூரப்பாவை பா.ஜனதாவினர் ராஜா புலி என்று வர்ணித்து அழைக்கிறார்கள். அப்படி என்றால் அவர் இதை அவமானம் என்று நினைக்கலாம் அல்லவா?. செய்தி தொலைக்காட்சிகளில் என்னை 'டகரு' (ஆட்டுக்கிடா) என்று சொல்கிறார்கள். ஆட்டுக்கிடா முட்டும் சுபாவம் கொண்டது. நான் யாரை முட்டியுள்ளேன்.

என்னை அவமதித்துவிட்டனர் என்று கோபப்படலாம் அல்லவா?. கர்நாடகத்தின் உரிமைகள் குறித்து பிரதமரிடம் பேச பயப்படும் பசவராஜ் பொம்மையை சிங்கம், புலியுடன் ஒப்பிட முடியுமா?.

இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

Next Story