சித்து மூஸ்வாலா கொலை வழக்கு: டெல்லி, அரியானாவில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை


சித்து மூஸ்வாலா கொலை வழக்கு:  டெல்லி, அரியானாவில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
x

சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் டெல்லி, அரியானா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.



புதுடெல்லி,



பஞ்சாபி நாட்டுப்புற பாடகர் மற்றும் சமூக ஆர்வலரான சித்து மூஸ்வாலா கடந்த மே 29-ம் தேதி தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவரை கொடூரமான முறையில் சுட்டு கொன்றது. இந்த துப்பாக்கி சூட்டில் மேலும் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

சித்து மூஸ்வாலா கொலை செய்யப்படுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு அவருக்கு வழங்கப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பு நீக்கி கொள்ளப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அவர் கொல்லப்பட்டது பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக பஞ்சாப் மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

டெல்லி திகார் சிறையில் உள்ள நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் என்பவர் கொலைக்கு பின்னணியில் செயல்பட்டு உள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில், போலீசார் லாரன்சை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் தொடர்புடைய 3 நபர்களை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அதன்படி தீபக், கபில் பண்டிட் மற்றும் ராஜீந்தர் ஆகிய 3 பேர் மேற்கு வங்கம்-நேபாளம் எல்லையில் உளவுத்துறை நடவடிக்கையில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

துப்பாக்கி சுடும் வீரராக தீபக் இருந்தார். அதே நேரத்தில், கபில் பண்டிட் மற்றும் ராஜீந்தர் அதற்கு ஆயுதங்கள் மற்றும் மறைவிடம் உள்ளிட்ட தளவாடங்களை வழங்கியுள்ளனர்.

சித்து மூஸ்வாலா கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய பயங்கரவாத கும்பலை தேடும் வகையில், டெல்லி, அரியானா, பஞ்சாப் மற்றும் தேசிய தலைநகர் பகுதி (என்.சி.ஆர்.) உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் பஞ்சாப் போலீசார் 23-வது குற்றவாளியை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தீபக் முண்டி என்பவர் முக்கிய குற்றவாளியாக கண்டறியப்பட்டு உள்ளார். இவரை சித்துவை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளார் என பஞ்சாப் டி.ஜி.பி. கவுரவ் யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

வழக்கில் 35 பேர் மொத்தம் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், 23 பேர் கைது செய்யப்பட்டும், 2 பேர் கொல்லப்பட்டும் விட்டனர். 4 பேர் நாட்டை விட்டு வேறிடத்தில் உள்ளனர். 6 பேர் இன்னும் போலீசாரிடம் பிடிபடாமல் தப்பியோடி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story