சிசோடியா பாரத ரத்னா விருது பெற வேண்டும்: குஜராத்தில் கெஜ்ரிவால் பேச்சு
70 ஆண்டுகளில் பிற கட்சிகள் செய்ய முடியாதவற்றை செய்துள்ள மணீஷ் சிசோடியா பாரத ரத்னா விருது பெற வேண்டும் என கெஜ்ரிவால் பேசியுள்ளார்.
ஆமதாபாத்,
குஜராத்தில் ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ச்சியாக குஜராத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் உள்ள நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பஞ்சாப்பில் தனது தேர்தல் அறிக்கை மற்றும் யுக்தியால் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்து அதிகாரத்திற்கு வந்ததுபோல் குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது.
இதன்படி, குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம், வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் அல்லது மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை கெஜ்ரிவால் வெளியிட்டார்.
இதன்பின்னர், குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் மாத உதவித்தொகையாக வழங்கப்படும் என மேலும் ஒரு வாக்குறுதியை டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனால், இளைஞர்கள், பெண்கள் என பலதரப்பட்ட மக்களையும் கவரும் வகையிலான வாக்குறுதிகளை வெளியிட்டு மக்களை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்-மந்திரி சிசோடியா இருவரும் குஜராத்துக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன்படி, அவர்கள் இருவரும் ஆமதாபாத் நகருக்கு இன்று சென்றனர்.
இதன்பின்பு ஹிமத்நகரில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் பொது கூட்டம் ஒன்றில் அவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், குஜராத் மக்கள் அனைவருக்கும் இலவச மற்றும் சிறந்த சுகாதார சிகிச்சைகளை நாங்கள் வழங்குவோம் என உத்தரவாதம் அளிக்கிறோம்.
டெல்லியில் அமைந்துள்ள மொஹல்லா கிளினிக்குகளை போன்று, நகரங்கள் மற்றும் கிராமங்களில் சுகாதார கிளினிக்குகள் திறக்கப்படும். அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவோம். தேவைப்பட்டால் புதிய அரசு மருத்துவமனைகள் திறக்கப்படும் என பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய கெஜ்ரிவால், டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா அரசு பள்ளிகளில் சீர்திருத்தங்களை செய்துள்ளார். 70 ஆண்டுகளில் பிற கட்சிகள் செய்ய முடியாதவற்றை அவர் செய்துள்ளார்.
அதுபோன்ற நபர், பாரத ரத்னா விருது பெற வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த கல்வி திட்டமும் அவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக அவருக்கு எதிராக சி.பி.ஐ. சோதனையை அவர்கள் நடத்துகின்றனர் என கூறியுள்ளார். இதன்பின்பு, அவர்கள் இருவரும் நாளை (23-ந்தேதி) பவ்நகரில் உரையாற்றுகின்றனர்.