துங்கபத்ரா ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சகோதரிகள் கதி என்ன?; தீவிர தேடுதல் வேட்டை


துங்கபத்ரா ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சகோதரிகள் கதி என்ன?; தீவிர தேடுதல் வேட்டை
x

துங்கபத்ரா ஆற்றில் குளிக்க சென்ற சகோதரிகள் 2 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. 2 பேரையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சிக்கமகளூரு;


சகோதரிகள்

தாவணகெரே மாவட்டம் மலேபென்னூர் தாலுகா ஹீச்சவ்வனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வீராச்சாரி. இவரது மகள்கள் சைத்ரா (வயது 19) மற்றும் புஷ்பா (17). இதில் சைத்ராவுக்கு குண்டேரி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவருடன் திருமணம் ஆகிவிட்டது. புஷ்பா தாவணகெரேவில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.யூ.சி படித்து வந்தார்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் உக்கடகாத்ரி பகுதியில் ஓடும் துங்கபத்ரா ஆற்றில் குளிப்பதற்காக சென்றனர். ஆற்றில் தண்ணீர் அதிகம் வந்ததாக தெரிகிறது. மேலும் அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்

இதனால் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்க முயன்றனர். ஆனாலும் அவர்களால் 2 பேரையும் மீட்க முடியவில்லை. இதுபற்றி மலேபென்னூர் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை. இதையடுத்து நீச்சல் வீரர்கள், மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சைத்ரா மற்றும் புஷ்பாவை தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

இதுகுறித்து மலேபென்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story