ஒடிசா: அசுத்தமான குடிநீரை குடித்ததால் விபரீதம்; 6 பேர் பலி
ஒடிசாவில் திறந்த வெளியில் இருந்த அசுத்தமான குடிநீரை குடித்த கிராமத்தினர் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் ரயகடா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் மக்களுக்கு திடீரென உடநலக்குறைவு ஏற்பட்டது. அம்மாவட்டத்தின் மல்லிகுடா, துடுகபாஹல், திகிரி, கோபிரிகிடா, ரூட்ஹிடி, ஜலக்ஹரா, தங்கசில், ரெங்கா, ஹடிகுடா, மைகஞ்ச், சங்கரதா, குட்ச்படர் உள்பட பல கிராமங்களை சேர்ந்த பலருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, 80-க்கும் மேற்பட்டோர் கடுமையான வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மருத்துவக்குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு ஆய்வுப்பணிகளை மேற்கொண்ட மருத்துவக்குழுவினர் பொதுவெளியில் இருந்த அசுத்தமான நீரை பொதுமக்கள் குடித்ததாலேயே வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்படுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.