பஸ் நிறுத்தத்திற்குள் பாய்ந்த லாரி; 6 பேர் பலி - டிரைவர் ஓட்டம்
சாலையோரம் உள்ள பஸ் நிறுத்தத்திற்குள் லாரி பாய்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
போபால்,
மத்தியபிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டம் சத்ருண்டா என்ற கிராமத்தில் பிரதான சாலையில் முக்கிய சந்திப்பு பகுதியாக உள்ளது.
இந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் மற்றும் அதன் அருகே இன்று மாலை 20-க்கும் மேற்பட்டோர் நின்றுகொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிறுத்தத்திற்குள் பாய்ந்தது. இந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, விபத்தை ஏற்படுத்திய லாரியின் டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் லாரி டயர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.