காஷ்மீர்: காரில் ரத்தக்கறை, ராணுவ வீரர் மாயம் - தேடுதல் பணி தீவிரம்

ராணுவ வீரர் சென்ற காரில் ரத்தக்கறை இருந்தது.
காஷ்மீர்: காரில் ரத்தக்கறை, ராணுவ வீரர் மாயம் - தேடுதல் பணி தீவிரம்
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் குல்காம் மாவட்டம் அஜதல் பகுதியை சேர்ந்தவர் ஜாவித் அகமது வானி (வயது 25). ராணுவ வீரரான இவர் லடாக்கின் லே பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். ஜாவித் கடந்த சில நாட்களுக்கு முன் விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், ஜாவித் நேற்று மாலை அஜதலில் இருந்து மளிகை பொருட்கள் வாங்க, காரில் சவல்ஹம் பகுதிக்கு சென்றுள்ளார்.

இரவு வெகுநேரமாகியும் ஜாவித் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் ஜாவித் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால், செல்போன் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால், குடும்பத்தினர் அருகில் உள்ள கிராமங்களில் ஜாவித்தை தேடினர்.

அப்போது, பரன்ஹல் என்ற கிராமத்தின் அருகே ஜாவித் கார் நிறுத்தப்பட்டிருந்தது. காரின் கதவுகள் திறக்கப்பட்டிருந்தது. காரின் இருக்கையில் ரத்தக்கறை இருந்தது. மேலும், ஜாவித்தின் செருப்புகளும் கார் அருகே கிடந்தன.

இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து போலீசார், ராணுவம், பாதுகாப்புப்படையினர் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வீரர் ஜாவித்தை பயங்கரவாதிகள் கடத்திச்சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் கார் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com