தென்மேற்கு பருவமழை: கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!


தென்மேற்கு பருவமழை: கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!
x

தென்தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் தாமதமாக நேற்று தொடங்கியது. லட்சத்தீவு, அந்தமான் பகுதியில் தொடங்கிய இந்த மழை நேற்று முதலே மாநிலம் முழுவதும் தீவிரம் அடைந்துள்ளது. மேலும் இந்த மழை மன்னார் வளைகுடா முதல் தென்தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு வருகிற 12-ந் தேதி வரை மாநில நிர்வாகம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நாட்களில் மலையோர பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்றும் கடலோர கிராமங்களில் சூறைக்காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுபோல கேரளாவின் பொழியூர் முதல் காசர்கோடு வரையிலான கடல்பகுதியில் கடல் சீற்றம் காணப்படும் என்றும், அலைகள் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு எழும்பும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிபோர்ஜோய் புயல் காரணமாக தென்மேற்கு பருவமழை இயல்புக்கும் குறைவாக பெய்யும் என கூறப்பட்டது. ஆனால் இப்போது பிபோர்ஜோய் புயல் காரணமாக பருவமழை பொழிவில் பாதிப்பு இருக்காது என்றும் இயல்பான அளவுக்கு மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story