பொங்கல் பண்டிகையையொட்டி கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?


பொங்கல் பண்டிகையையொட்டி கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
x

பொங்கல் பண்டிகையையொட்டி பெங்களூருவில் இருந்து திருநெல்வேலி மற்றும் நாகர்கோவிலுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? என்று தமிழக தென் மாவட்ட மக்கள் பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

பெங்களூரு:

பொங்கல் பண்டிகையையொட்டி பெங்களூருவில் இருந்து திருநெல்வேலி மற்றும் நாகர்கோவிலுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? என்று தமிழக தென் மாவட்ட மக்கள் பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

தமிழக மக்கள்

கர்நாடக தலைநகர் பெங்களூருவில், தமிழ்நாடு திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, ஆற்காடு, ஆரணி, செய்யாறு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், விருத்தாச்சலம், வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும், தர்மபுரி, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் கணிசமாக வசித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தமிழக பயணிகள் வசதிக்காக பெங்களூரு மைசூரு ரோட்டில் உள்ள சாட்டிலைட் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரை, திருநெல்வேலி, தென்காசி, திருவனந்தபுரம், நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக சாந்திநகர் பஸ் நிலையத்தில் இருந்து தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தொலைதூர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பெங்களூரு-நாகர்கோவில் ரெயில்

இந்த நிலையில் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் வரை ரெயில் இயக்கப்பட்டு வந்தது. பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் இயங்கியது கே.பி.அக்ரஹாரா, ராஜாஜிநகர், கண்டோன்மென்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு அனுகூலமாக இருந்தது. ஆனால் தற்போது பெங்களூரு-நாகர்கோவில் ரெயில் பையப்பனஹள்ளியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள சர்.எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் மெஜஸ்டிக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் பயணிகளுக்கு புதிய ரெயில் நிலையம் செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. கே.பி.அக்ரஹாரா, ராஜாஜிநகர் பகுதியில் வசித்து வரும் தமிழக தென்மாவட்ட மக்கள் பையப்பனஹள்ளிக்கு செல்வதை விட சாந்திநகர் பஸ் நிலையத்திற்கு சென்று பஸ்சில் ஏறி சென்று விடலாம் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் பஸ்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.

கட்டணம் உயர்வு

இந்த நிலையில் வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பெங்களூருவில் வசித்து வரும் தமிழர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட தயாராகி விட்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13-ந்தேதி க்கான ரெயில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. அதாவது 12-ந்தேதி மற்றும் 14-ந்தேதிக்கான டிக்கெட்டுகளும் விற்றுதீர்ந்து விட்டன. 12-ந்தேதிக்கு 189 பேரும், 14-ந்தேதி 191 பேரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். அதிலும் தற்போது தட்கல், பிரிமீயம் தட்கலில் ரெயில் டிக்கெட் கிடைப்பது என்பது குதிரை கொம்பாக உள்ளது.

ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர்வு

இதனால் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்பவர்கள் தமிழக அரசு பஸ்கள், ஆம்னி பஸ்களில் செல்லும் நிலையில் உள்ளனர். இதில் ஆம்னி பஸ்களில் பெங்களூருவில் இருந்து திருநெல்வேலிக்கு சாதாரண நாட்களில் படுக்கை வசதி கட்டணம் ரூ.1,600-ம், சாதாரண இருக்கை கட்டணம் ரூ.1,050-ம் உள்ளது. ஆனால் பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்த்தி விடுகிறார்கள்.

தற்போது பொங்கலையொட்டி பெங்களூருவில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் கட்டணம் கிடுகிடு என உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது படுக்கை வசதி கட்டணம் ரூ.3,800 ஆகவும், சாதாரண இருக்கை கட்டணம் ரூ.2,400 ஆகவும் உள்ளது.

அரசு பஸ்களில் முன்பதிவு

ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால், பயணிகள் தங்களது அடுத்த தேர்வாக தமிழக அரசு பஸ்களை எதிர்நோக்கி உள்ளனர். ஆனால் தமிழக அரசு பஸ்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது.

பெங்களூருவில் இருந்து தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு வருகிற 13-ந் தேதி செல்லும் தமிழக அரசு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 13-ந் தேதி தமிழக அரசு பஸ்களில் டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்றுதீர்ந்து உள்ளது. 14-ந் தேதியும் பெரும்பாலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஒரு சில பஸ்களில் 10-க்கும் குறைவான இருக்கைகள் காலியாக உள்ளது. அதே நேரம் ஆம்னி பஸ்களில் 12, 13, 14-ந் தேதிகளில் டிக்கெட் நிரம்பி உள்ளது. அந்த பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.

பயணிகள் கருத்து

இதனால் பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்று பயணிகள் சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் தங்களது கருத்துகளை கூறியதாவது:-

பெங்களூரு கே.ஆர்.புரத்தில் தனியார் நிறுவன ஊழியராக வேலை செய்யும் பரத், "எனது சொந்த ஊர் திருநெல்வேலியில் உள்ள பாபநாசம் ஆகும். நான் முன்பு பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி வரை ரெயிலில் சென்று வந்தேன். கே.ஆர்.புரத்தில் இருந்து சிட்டி ரெயில் நிலையம் செல்ல குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். தற்போது புதிதாக கட்டப்பட்டு உள்ள சர்.எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் நிலையத்திற்கு கே.ஆர்.புரத்தில் இருந்து 10 முதல் 15 நிமிடங்களில் சென்று விடலாம்.

இதனால் ரெயில் மூலம் எளிதாக ஊருக்கு சென்று விடலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் ரெயிலில் டிக்கெட்டுகள் இல்லை. சரி அரசு பஸ்சில் ஊருக்கு செல்லலாம் என்று நினைத்தால் அரசு பஸ்சிலும் முன்பதிவு முடிந்து விட்டது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக கூடுதல் பஸ்களை இயக்கினால் நன்றாக இருக்கும். எனவே தமிழக அரசு கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

பெங்களூரு இந்திராநகரில் வசித்து வரும் பேச்சியம்மாள், "நான் எனது மகன், மருமகளுடன் பெங்களூருவில் வசித்து வருகிறேன். எனது சொந்த ஊர் திருநெல்வேலி ஆகும். அங்கு எனது மகள்கள் வசித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை ஆண்டுதோறும் ஊருக்கு சென்று கொண்டாடி வருகிறேன். வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு 3 மாதங்களுக்கு முன்பே ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து விடுவேன். இந்த முறை ரெயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை. தனியார் பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல முடியுமா என்று தெரியவில்லை.

இதனால் அரசு பஸ்சை தான் நம்பி உள்ளேன். அரசு பஸ்களிலும் டிக்கெட் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லை. பெங்களூருவில் இருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிக்கு ஏராளமான பயணிகள் கண்டிப்பாக செல்வார்கள். இதனால் கூடுதல் பஸ்களை இயக்குவது குறித்து தமிழக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

எலகங்கா அருகே நாகேனஹள்ளி கேட் பகுதியில் வசித்து வரும் பிரதாப், "எனது சொந்த ஊர் நாகர்கோவில். பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்ல ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியவில்லை. காத்திருப்போர் பட்டியல் அதிகமாக உள்ளது. தனியாக சென்றால் ரெயிலில் பொது பெட்டியில் கூட அமர்ந்து சென்று விடலாம். ஆனால் குடும்பத்தினருடன் ஊருக்கு செல்லும் போது ரெயிலில் பொது பெட்டியில் செல்வது கஷ்டமாக இருக்கும்.

இதனால் சாந்திநகரில் இருந்து இயக்கப்படும் தமிழக அரசு பஸ்களில் ஊருக்கு சென்று விடலாம் என்று நினைத்து உள்ளேன். ஆனால் பொங்கல் பண்டிகையொட்டி கூட்டம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. பெரும்பாலான பஸ்களில் முன்பதிவு முடிந்திருக்கும். எனவே பயணிகள் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் சமயத்தில், கூடுதல் பஸ்களை இயக்கினால் நன்றாக இருக்கும்'' என்றார்.

விஜயநகரில் வசித்து வரும் லட்சுமி, "பொங்கல் பண்டிகையை கொண்டாட நான் திருநெல்வேலிக்கு செல்ல வேண்டும். தமிழக அரசு பஸ்களில் 13-ந் தேதி டிக்கெட்டுகள் இல்லை. 14-ந் தேதி பஸ்களில் பெரும்பாலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. ஆனால் 14-ந் தேதி இங்கிருந்து புறப்பட்டு சென்றால் பெங்களூரு நகரில் உள்ள போக்குவரத்து நெரிசலில் சிக்கி 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட முடியுமா? ஊருக்கு சென்று விட முடியுமா? என்று தெரியவில்லை.

13-ந் தேதி ஒரே ஒரு சிறப்பு பஸ் மட்டும் தான் இயக்கப்படுகிறது. மற்ற பஸ்கள் வழக்கம்போல செல்கின்றன. கூடுதல் பஸ்களை இயக்கினால் பயணிகளுக்கு அனுகூலமாக இருக்கும்" என்றார்.

மேற்கண்டவர்களை தவிர கே.பி.அக்ரஹாரா, விவேக்நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் தமிழக தென்மாவட்ட மக்களும் கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story