தேவாலயங்களில் மக்கள் சிறப்பு பிரார்த்தனை
பெங்களூருவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே மக்கள் தேவாலயங்களில் குவிந்து பிரார்த்தனை செய்தனர்.
பெங்களூரு:-
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
இயேசு கிறிஸ்து பிறந்த தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது. கிறிஸ்தவர்களின் இல்லங்களுக்கு பாடகர் குழுவினர் வந்து பாடல்களை பாடி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தனர். இதுதவிர, தேவாலயங்களிலும், வீடுகளிலும் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டு, விளக்குகளால் அலங்கரித்து வைத்திருந்தனர். பெங்களூருவில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியது.
சிறப்பு பிரார்த்தனை
பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள ஆரோக்கிய அன்னை தேவாலயம் உள்பட நகரில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் நேற்று முன்தினம் இரவு முதலே கிறிஸ்தவர்கள் குவிந்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர். நேற்று அதிகாலையிலும் தேவாலயங்களில் குவிந்து மக்கள் பிரார்த்தனை நடத்தினர். சிவாஜிநகர் ஆரோக்கிய அன்னை ேதவாலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
பெங்களூரு விவேக் நகரில் உள்ள குழந்தை இயேசு தேவாலயத்தில் பாதிரியார் ஜோசப் மெனசெஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் அந்தப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.
மேலும் பிரிகேட் ரோட்டில் உள்ள புனித பேட்ரிக் தேவாலயத்தில் பாதிரியார்கள் கிரிஸ்டி ராஜ் ஐசக், ஜாஸ்வா ஆகியோர் தலைமையில் கூட்டு பிரார்த்தனை நடந்தது. அல்சூரில் உள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் திருச்சபையில் ரூபென் பிஷப் முன்னிலையில் மக்கள் கூட்டு பிரார்த்தனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.
கே.பி.அக்ரஹாரா
ரிச்மண்ட் ேராட்டில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் பாதிரியார் ஜோசப் சூசைநாதன் தலைமையில் அதிகாலையில் இருந்து காலை 9.30 மணி வரை இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, மகிமை, அவர் வழிநடத்தல், உலக நன்மையை முன்னிருத்தி விஷேச பிரார்த்தனைகள் நடைபெற்றது. கே.பி.அக்ரஹாராவில் உள்ள சீயோன் ஆலயத்திலும் ஏராளமான கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
இதேபோல் பெங்களூருவின் பல்வேறு ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் ஒன்றாக கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும், புத்தாடைகள் அணிந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.