சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக பெலகாவி-கொல்லம் இடையே சிறப்பு ரெயில்கள்


சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக பெலகாவி-கொல்லம் இடையே சிறப்பு ரெயில்கள்
x
தினத்தந்தி 14 Nov 2022 6:45 PM GMT (Updated: 14 Nov 2022 6:45 PM GMT)

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக பெங்களூரு வழியாக பெலகாவி-கொல்லம் இடையே சிறப்பு ரெயில்கள் இயங்க உள்ளது.

பெங்களூரு:

பெலகாவி-கொல்லம்

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக தென்மேற்கு ரெயில்வே சார்பில் பெலகாவி-கொல்லம், உப்பள்ளி-கொல்லம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி வருகிற 20-ந் தேதி காலை 11.30 மணிக்கு பெலகாவியில் இருந்து புறப்படும் ரெயில் (07357) மறுநாள் அதாவது 21-ந் தேதி மதியம் 3.15 மணிக்கு கொல்லம் சென்றடைகிறது. மறுமார்க்கமாக 21-ந் தேதி மாலை 5.10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் ரெயில் (07358) 22-ந் தேதி இரவு 11 மணிக்கு பெலகாவிக்கு வருகிறது.

இதுபோல அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 15-ந் தேதி வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெலகாவி-கொல்லம் இடையே ரெயில் (07361) இயங்குகிறது. கொல்லம்-பெலகாவி இடையே அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் ஜனவரி 16-ந் தேதி வரை வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் ரெயில் (07362) இயங்குகிறது. இந்த ரெயில்கள் மேற்கண்ட நேரத்தில் இயங்குகிறது.

எலகங்கா, சேலம்

இந்த ரெயில்கள் கானாப்புரா, லோண்டா, தார்வார், உப்பள்ளி, ஹாவேரி, ராணிபென்னூர், தாவணகெரே, பீருர், அரிசிகெரே, திப்தூர், துமகூரு, எலகங்கா, கே.ஆர்.புரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிகரா, காயங்குளம், சாஸ்தான்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

உப்பள்ளி-கொல்லம் இடையே வருகிற 27-ந் தேதி ரெயில் (07359) ரெயில் இயங்குகிறது. உப்பள்ளியில் இருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் மதியம் 3.15 மணிக்கு கொல்லம் செல்கிறது. கொல்லத்தில் இருந்து 28-ந் தேதி மாலை 5.10 மணிக்கு புறப்படும் ரெயில் (07360) மறுநாள் இரவு 8 மணிக்கு உப்பள்ளிக்கு வருகிறது. இந்த ரெயில்களும் மேற்கண்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.


Next Story