பெங்களூருவில் முறையற்ற வேகத்தடைகள் அகற்றப்படுமா?


பெங்களூருவில் முறையற்ற வேகத்தடைகள் அகற்றப்படுமா?
x

பெங்களூருவில் முறையற்ற மற்றும் சட்டவிரோத வேகத்தடைகள் அகற்றப்படுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூருவில் முறையற்ற மற்றும் சட்டவிரோத வேகத்தடைகள் அகற்றப்படுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

வாகனங்கள் நெரிசல்

பெங்களூரு நகரம் சுமார் 800 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டது. பெருநகர மாநகராட்சியாக திகழும் பெங்களூருவில் 1.30 கோடி பேர் வசிக்கிறார்கள். நகரில் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டது. தினமும் புதிதாக 5 ஆயிரம் வாகனங்கள் சாலைக்கு வருகின்றன. அதனால் நகரின் மக்கள்தொகையை எட்டிப்பிடிக்கும் வகையில் வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

இதனால் பெங்களூரு நகரில் சாலைகளில் வாகனங்களின் நெரிசல் அதிகமாக உள்ளது. அதாவது சாலைகளில் வாகனங்கள் எப்போதும் அணிவகுத்து நிற்கின்றன. பிரதான சாலைகள் மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளில் உள்ள குறுக்கு சாலைகளிலும் வாகன போக்குவரத்து அதிகரித்துவிட்டது. நகரில் வசிக்கும் பெரும்பாலான மக்களிடம் வீட்டிற்கு 2 முதல் 5 வாகனங்கள் வரை இருக்கின்றன. இதனால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சிறிய சாலைகளில் வாகனங்கள் குறுக்கும்-நெடுக்குமாக செல்கின்றன.

குழந்தைகள்-மூத்த குடிமக்கள்

இத்தகைய வாகனங்களின் போக்குவரத்தால் குழந்தைகள் வெளியில் வந்து தெருவில் சகஜமாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையும் மீறி குழந்தைகள் தெருவில் விளையாடும்போது, வேகமாக வரும் வாகனங்களில் சிக்கி பாதிக்கப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. சில நேரங்களில் குழந்தைகள், மூத்த குடிமக்கள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன.

இத்தகைய சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் குடியிருப்பு பகுதிகள், பள்ளி-கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள், மேட்டு பகுதியில் இருந்து வரும் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் பொருட்டு பள்ளமான பகுதிகளில் வேகத்தடைகள் அரசால் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் அமைக்கப்படுகின்றன. அவ்வாறு வேகத்தடை அமைக்கும்போது, அதை எவ்வாறு அமைக்க வேண்டும், வேகத்தடை இருக்கிறது என்பதை வாகன ஓட்டிகளுக்கு சற்று முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் தகவலை தெரிவிக்கும் தகவல் பலகைகளை வைப்பது போன்ற பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த நிலையில் பெங்களூருவில் முறையற்ற மற்றும் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தகவல் இல்லை

கோரமங்களாவை சேர்ந்த வாகன ஓட்டி சசிக்குமார் கூறுகையில், "பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் உரிய அனுமதி இன்றி வேகத்தடைகளை அமைத்துள்ளனர். அந்த வேகத்தடை இருப்பது குறித்து வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் எந்த தகவலும் இல்லை. அதனால் வாகன ஓட்டிகள் வேகமாக வந்து, வேகத்தடைகள் மீது விட்டு விபத்துகளில் சிக்கி பாதிக்கப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. இத்தகைய சம்பவங்களை தடுக்க நகரில் உள்ள அனைத்து அறிவியலுக்கு மாறான வேகத்தடைகளையும் அகற்ற வேண்டும்" என்றார்.

பொம்மனஹள்ளியை சேர்ந்த வாகன ஓட்டி சுஜாராம் கூறும்போது, "பெங்களூருவில் குடியிருப்பு பகுதிகளில் மட்டுமின்றி சில இடங்களில் முக்கியமான சாலைகளிலும் முறையற்ற முறையில் வேகத்தடைகளை அமைத்துள்ளனர். வாகனத்தில் வேகமாக செல்லும்போது, வேகத்தடை இருப்பது தெரிவது இல்லை. மிக அருகில் செல்லும்போது தான் வேகத்தடை இருப்பதே தெரியவரும். அவ்வாறான நிலையில் திடீரென பிரேக் போடும்போது கீழே விழுந்து காயம் அடையும் சம்பவங்கள் நடக்கின்றன. அதனால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் அனைத்தையும் அகற்ற வேண்டும்" என்றார்.

என்ஜினீயரிடம் புகார்

மாகடி ரோட்டில் உள்ள சமூக சேவகர் பாஸ்கர் கூறுகையில், "எங்கள் பகுதியில் ஒரு தெருவில் எந்த விதமான முன் அனுமதியும் பெறாமல் ஒருவர் கான்கிரீட்டை பயன்படுத்தி வேகத்தடையை அமைத்திருந்தார். இதனால் அந்த தெருவில் வண்டியை ஓட்டுவதே கடினமாக இருந்தது. அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டன. நாங்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி என்ஜினீயரிடம் புகார் கூறினோம். எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். சமீபத்தில் கனமழை பெய்தது. அப்போது அந்த கான்கிரீட் வேகத்தடை மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அதனால் உரிய அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை உடனே அகற்ற வேண்டும்" என்றார்.

என்ன சொல்கிறார்...

இதுகுறித்து பெங்களூரு நகர போக்குவரத்து சிறப்பு கமிஷனர் எம்.ஏ.சலீம் கூறியதாவது:-

பெங்களூருவில் குடியிருப்பு பகுதிகளில் விபத்துகள் நடக்கும்போது, தேவை அடிப்படையில் அறிவியலுக்கு மாறான முறையில் வேகத்தடைகளை உள்ளூர் மக்கள் அமைக்கிறார்கள். அறிவியல் பூர்வமாகவும், பாதசாரிகள் அதிக எண்ணிக்கையில் சாலைகளை கடக்கும் பகுதியிலும் மட்டுமே வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும். முறைப்படி அமைக்கப்படும் வேகத்தடைகள் உள்ள சாலைகளில் சில நேரங்களில் வாகனங்கள் வேகமாக சென்றாலும் விபத்துகள் ஏற்படாது. ஏனென்றால் அவைகள் அறிவியலுக்கு ஏற்றபடி நிறுவப்படுகிறது.

நகரில் சுமார் 427 வேகத்தடைகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பெங்களூரு மாநகராட்சியிடம் கூறியுள்ளேன். இத்தகைய வேகத்தடைகளை அகற்றினாலும், பொதுமக்கள் மீண்டும் மீண்டும் அதே இடத்தில் முறையற்ற வேகத்தடைகளை அமைக்கிறார்கள். இதுபோன்ற வேகத்தடைகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதுடன் போக்குவரத்தையும் பாதிக்க செய்கிறது. சில இடங்களில் அதாவது 55 இடங்களில் சாலைகளில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய பெரிய குழாய்களும் ரோட்டில் போட்டு வைத்துள்ளனர். நடைபாதைகளில் சிறு கடைகளை விரித்துள்ளனர். போக்குவரத்து பாதிப்புக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் ஆகும். இவற்றை எல்லாம் சரிசெய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

பெங்களூருவில் எங்கெங்கு அறிவியலுக்கு மாறான முறையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. அந்த வேகத்தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பணிகளை நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம். விரைவில் அனைத்து சட்டவிரோதமான வேகத்தடைகளையும் அகற்றுவோம். பொதுமக்கள் உரிய அனுமதி இன்றி தாமாகவே வேகத்தடைகளை அமைக்க கூடாது".

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story