தரையிறங்கும் முன் நடுவானில் குலுங்கிய ஸ்பைஸ்ஜெட் விமானம்; விமானியின் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து - டிஜிசிஏ உத்தரவு


தரையிறங்கும் முன் நடுவானில் குலுங்கிய ஸ்பைஸ்ஜெட் விமானம்; விமானியின் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து - டிஜிசிஏ உத்தரவு
x

விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனம், ஸ்பைஸ்ஜெட் விமானத்தை இயக்கிய விமானியின் உரிமத்தை ஆறு மாதங்களுக்கு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

மும்பையில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள துர்காபூர் விமான நிலையத்திற்கு கடந்த மே மாதம்1-ந் தேதி மாலை 5 மணியளவில் ஸ்பைஸ்ஜெட் தனியார் பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் தரையிறங்கும்போது பெரிய அளவில் குலுங்கியுள்ளது. எனினும் விமானி அதனை கட்டுப்படுத்தினார். விமானம் பின்னர் சீராக வந்து நின்றது.

இந்த சம்பவத்தில் பயணிகளின் தலைக்கு மேலே வைத்திருந்த உடைமைகள் அடங்கிய பைகள் அவர்கள் மீது விழுந்துள்ளன. இந்த சம்பவத்தில் 40 பேர் காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானக்குழு ஊழியர்களை விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனம் (டிஜிசிஏ) பட்டியலிட்டுள்ளது. அந்த விமான பராமரிப்பு பொறியாளர், முறையான விசாரணைக்கு முன் விமானத்தை துர்காபூரில் இருந்து கொல்கத்தா செல்ல அனுமதித்தார் என்பதால் அவரை விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனம் நீக்கியது.

டிஜிசிஏ, நடத்திய விசாரணையில், அவசர காலத்தில் தானாக விமானத்தை கட்டுப்படுத்தும் 'ஆட்டோமெட்டிக் பைலட்' துண்டிக்கப்பட்டதால், பல நிமிடங்களுக்கு விமானத்தை விமானிகள் தான் கைமுறையாகக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. இதனால் விமானம் இறங்கும் போது பலமுறை பலமாக குலுங்கியது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை நிறுவனம் (டிஜிசிஏ), ஸ்பைஸ்ஜெட் விமானத்தை இயக்கிய விமானியின் உரிமத்தை ஆறு மாதங்களுக்கு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.


Next Story