மேற்கு வங்காளத்தில் 'வந்தே பாரத்' ரெயில் மீது கல் வீசி தாக்குதல் என்.ஐ.ஏ. விசாரணைக்கு பா.ஜ.க கோரிக்கை
மேற்கு வங்காள மாநிலத்தில் ஹவுரா-புது ஜல்பைகுரி இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவேக ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கிவைத்தார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தில் ஹவுரா-புது ஜல்பைகுரி இடையிலான 'வந்தே பாரத்' அதிவேக ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கிவைத்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த ரெயில், புது ஜல்பைகுரியில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்றது.
மால்டா மாவட்டத்தின் குமார்கஞ்ச் ரெயில் நிலையம் அருகில்சென்றபோது, அடையாளம் தெரியாத விஷமிகள் சிலர் வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசி தாக்கினர்.
அதில் ஒரு பெட்டியின் கண்ணாடி கதவில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் ரெயில் தொடர்ந்து இயக்கப்பட்டு, அடுத்து வந்த வழக்கமான நிறுத்தமான மால்டா ரெயில் நிலையத்தில்தான் நிறுத்தப்பட்டது.
அந்த ரெயில் நிலைய ரெயில்வே போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில், மேற்கு வங்காள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜ.க. தலைவருமான சுவேந்து அதிகாரி, 'இந்த ரெயில் தொடக்கவிழாவில் 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷம் எழுப்பப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் கல் வீசி தாக்கப்பட்டுள்ளதா?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலன் விசாரணை அமைப்பின் (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹவுராவில் நடந்த வந்தே பாரத் ரெயில் தொடக்கவிழாவில் பா.ஜ.க. தொண்டர்கள் சிலர் 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கம் எழுப்பினர். அதையடுத்து தொடக்கவிழா மேடையில் ஏற முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.