பஸ் பாஸ் வைத்திருந்ததால் ஏற்ற மறுப்பு: அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்
பஸ் பாஸ் வைத்திருந்ததால் ஏற்ற மறுத்ததால் அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
சிக்கமகளூரு:
சித்ரதுர்கா மாவட்டம் மொலகால்மூரு தாலுகா குணசாகரா மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் மொலகால்மூருவில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில், அந்த கிராமங்கள் வழியாக மொலகால்மூருவுக்கு செல்லும் அரசு பஸ்களில், இலவச பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவ-மாணவிகளை டிரைவர், கண்டக்டர்கள் ஏற்ற மறுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் குணசாகரா பகுதியில் அரசு பஸ்சை சிறைபிடித்து மாணவ-மாணவிகள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் அரசு பஸ் பணிமனை மேலாளர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவ-மாணவிகளை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்தப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.