கரும்பு விவசாயி சின்னம்: டெல்லி ஐகோர்ட்டில் நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையம் இடையே காரசார விவாதம்


கரும்பு விவசாயி சின்னம்: டெல்லி ஐகோர்ட்டில் நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையம் இடையே காரசார விவாதம்
x

கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையம் இடையே காரசார விவாதம் நடந்தது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்யக்கோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் அக்கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக டெல்லி ஐகோர்ட்டிலும் நாம் தமிழர் கட்சி மனு தாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்த மனு டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி மன்மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாட்டில் 3-வது பெரிய கட்சி, 5.7 சதவீத வாக்குகளைக் கொண்டுள்ளது. விதிப்படி நாடாளுமன்ற தேர்தலுக்கு 3 மாதத்துக்கு முன் கரும்பு விவசாயி சின்னம் கேட்டு விண்ணப்பித்தோம் என நாம் தமிழர் கட்சி சார்பில் வாதிடப்பட்டது.

முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வேறு நபருக்கு அந்த சின்னத்தை ஒதுக்கிவிட்டோம். பொது சின்னங்களை யாரும் உரிமை கொண்டாட முடியாது. இதுபோன்ற சின்னத்தை ஒதுக்க உத்தரவிட்டால் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யும் நிலை உருவாகும். கரும்பு விவசாயி சின்னம் வேண்டும் என்றால் கூடுதலான வாக்குகளைப் பெற்று அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறட்டும். விதிமுறைகள் அடிப்படையில் மட்டுமே சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் பதிலளித்தது. இதையடுத்து, சின்னம் ஒதுக்கல் பற்றி தேர்தல் ஆணையம் மீண்டும் பரிசீலிக்க உத்தரவிடுமாறு நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்தது.

அப்போது குறுக்கீட்ட நீதிபதி கரும்பு விவசாயி சின்னம் உங்களுக்கு லக்கி இல்லை; அதனை மாற்றிவிடுங்கள். உங்கள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல; பின்னர் எவ்வாறு கோரிக்கை வைக்க முடியும்?. குறிப்பிட்ட வாக்கு சதவீதத்துடன் குறிப்பிட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம் கிடைக்கும். நாம் தமிழர் கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க அறிவுறுத்தல் வழங்குவதே சிரமமான காரியம் என்று கூறிய நீதிபதி மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.


Next Story