எல்லையில் கைது செய்யப்பட்ட தற்கொலை பயங்கரவாதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு


எல்லையில் கைது செய்யப்பட்ட தற்கொலை பயங்கரவாதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு
x

எல்லையில் ஊடுருவல் முயற்சியில் கைது செய்யப்பட்ட தற்கொலை பயங்கரவாதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இன்று உயிரிழந்த தகவலை ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.



ரஜோரி,



ஜம்மு மற்றும் காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷேரா பகுதியில் ஜங்கார் பிரிவில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கடந்த ஆகஸ்டு 21-ந்தேதி, 4 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றுள்ளனர். அவர்களை ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்த முயன்றதில் மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில், இரு தரப்பினர் இடையே துப்பாக்கி சூடு நடந்தது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த தபராக் உசைன் என்பவரை இந்திய ராணுவம் பிடித்தது. இதன்பின் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இதுபற்றி உசைன் கூறும்போது, பாகிஸ்தான் ராணுவத்தின் கர்னல் யூனூஸ் என்பவர் அனுப்பி நாங்கள் தற்கொலை தாக்குதல் நடத்த வந்தோம். இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்த எனக்கு அவர் ரூ.30 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார்.

இதற்காக இந்திய ராணுவத்தின் 2 நிலைகளுக்கு சென்று பார்த்து வந்துள்ளேன் என கூறியுள்ளார். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த உசைன் திடீரென இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார். இந்த தகவலை ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

உசைனை பிடித்தது பற்றி இந்திய ராணுவ பிரிகேடியர் ராஜீவ் நாயர் கூறும்போது, உசைனின் தொடை மற்றும் தோள்பட்டையில் 2 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து ரத்தம் வழிந்தோடியது. சிக்கலான நிலையில் இருந்த உசைனுக்கு எங்களது வீரர்கள் 3 பாட்டில் வரை ரத்தம் கொடுத்தனர்.

உசைனுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. ஐ.சி.யூ.வில் வைக்கப்பட்ட பின்னர் உசைனின் உடல்நிலை சீரானது. எனினும், குணமடைய சில வாரங்கள் ஆகும். உசைனை ஒரு பயங்கரவாதியாகவே நாங்கள் நினைக்கவில்லை.

ஒரு நோயாளியை போன்று நினைத்து, உசைனின் உயிரை காப்பாற்றவே சிகிச்சை அளிக்கப்பட்டது. ராணுவ வீரர்களின் ரத்தம் சிந்த வைக்க வந்த நபருக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் ரத்தம் கொடுத்தது அவர்களது பெருந்தன்மை. உசைனின் ரத்த வகை மிக அரிய ஒன்று. ஓ நெகட்டிவ் ஆகும் என கூறினார்.

1 More update

Next Story