கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை


கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை
x

நஞ்சன்கூடு தாலுகாவில் கடன் தொல்லையால் விவசாயி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுக்கு யதீந்திரா சித்தராமையா எம்.எல்.ஏ. நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மைசூரு:

நஞ்சன்கூடு தாலுகாவில் கடன் தொல்லையால் விவசாயி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுக்கு யதீந்திரா சித்தராமையா எம்.எல்.ஏ. நேரில் அஞ்சலி செலுத்தினார்.

விவசாயி தற்கொலை

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா வருணா தொகுதிக்கு உட்பட்ட கெம்பிசித்தனஹுண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னப்பா(வயது 50). விவசாயியான இவருக்கு அப்பகுதியில் 20 சென்ட் இடம் உள்ளது. அந்த விவசாய நிலத்தில் அவர் விளைப்பயிர்களை பயிருட்டு விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் விவசாயத்திற்காக அவர் கந்து வட்டிக்காரர்களிடமும், வங்கியில் இருந்தும் கடன் வாங்கி இருந்தார்.

ஆனால் அவரால் பணத்தை திரும்ப கொடுக்க முடியவில்லை. மேலும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக்கேட்டு சன்னப்பாவுக்கு நெருக்கடி கொடுத்தனர். கடன் தொல்லையால் மனம் உடைந்த சன்னப்பா நேற்று முன்தினம் தனது நிலத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி நஞ்சன்கூடு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

நிவாரண நிதி

இதற்கிடையே இச்சம்பவம் குறித்து அறிந்த தொகுதி எம்.எல்.ஏ.வும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் மகனுமான யதீந்திரா நேற்று சன்னப்பாவின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் சன்னப்பாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் சன்னப்பாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் அவர்களுக்கு அரசிடம் இருந்து நிவாரண நிதி பெற்றுத்தருவதாக உறுதி அளித்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவும், சன்னப்பாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும் அவர்களுக்கு அரசிடம் இருந்து நிவாரண நிதி பெற்றுத்தர சிபாரிசு செய்வதாக அவர் உறுதி அளித்திருக்கிறார்.


Next Story