சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக டி.கே.சிவக்குமாருக்கு சம்மன்


சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக டி.கே.சிவக்குமாருக்கு சம்மன்
x

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் நாளை மறுநாள்(7-ந் தேதி) விசாரணைக்கு ஆஜராகும்படி கோரி காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வைத்துள்ளது.

பெங்களூரு:

டி.கே.சிவக்குமார் மீது வழக்கு

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். இவருக்கு சொந்தமான பெங்களூரு, டெல்லியில் உள்ள வீடுகளில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இருந்து ரூ.8½ கோடி ரொக்கமும் சிக்கி இருந்தது. இதுதொடர்பாக டி.கே.சிவக்குமார், அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி. உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதாவது சட்டவிரோத பண பரிமாற்றத்தில் டி.கே.சிவக்குமார் ஈடுபட்டதாக வழக்குப்பதிவானது. கோர்ட்டிலும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். கடந்த மாதம்(அக்டோபர்) ராகுல்காந்தி கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தபோது விசாரணைக்கு ஆஜராக டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பினார்கள். காலஅவகாசம் கேட்டும் அதிகாரிகள் அனுமதி வழங்காததால் டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார்கள்.

விசாரணைக்கு ஆஜராக சம்மன்

இந்த நிலையில், வருகிற 7-ந் தேதி (நாளை மறுநாள்) சட்டவிரோத பண பரிமாற்ற விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறையினர் டி.கே.சிவக்குமாருக்கு சம்மன் அனுப்பி வைத்துள்ளனர். நேற்று காலையில் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டுக்கு அந்த சம்மன் வந்திருந்தது. இதையடுத்து, நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக டி.கே.சிவக்குமார் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தன் மீது பதிவாகி உள்ள சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கை ரத்து செய்ய கோரி டெல்லி ஐகோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மீது விசாரணை நடத்திய ஐகோர்ட்டு, அமலாக்கத்துறையிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி இருந்தனர். சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் விசாரணைக்கு அழைத்து டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறையினர் தொந்தரவு கொடுப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.


Next Story