விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் சூரியோதயம் ஆரம்பம் - மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்


விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் சூரியோதயம் ஆரம்பம் - மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்
x

இந்தியாவின் சூரியோதயம் தொடங்கிவிட்டதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் ஸ்ரீஹரிகோட்டாவில் கூறினார்.

விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில், இருந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் திட்டமிட்ட இலக்கில் நிறுத்தப்பட்டது. இந்த வெற்றியை தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையில் விஞ்ஞானிகளை பாராட்டி மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங் பேசியதாவது:-

இந்தியாவின் சூரியோதயம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் திட்டம் வெற்றி அடைவதற்கு காரணமாக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.

இந்திய விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக இரவு, பகலாக உழைத்து இந்த வெற்றியை தேடி தந்துள்ளனர். விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் சூரியோதயம் தொடங்கி உள்ளது. நமது பிரதமர் கூறியதுபோல், வானம் நமது எல்லை என்ற நிலை மாறி விண்ணையும் தாண்டி இந்திய விண்வெளித்துறை பல சாதனைகள் படைத்து வருகிறது.

சிறப்பாக வழி நடத்தும் பிரதமர்

இந்திய விண்வெளித்துறையை பிரதமர் சிறப்பாக வழிநடத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது. தற்போது 'ஆதித்யா எல்-1' வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது நமது சொந்த கலாசாரத்திற்கு சான்றாகும்.

2023-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந் தேதியை இந்திய தாய் திருநாட்டில் உள்ளவர்கள் மறக்கவே முடியாது. இன்னும் 25 ஆண்டுகள் ஆன பிறகு 100 ஆண்டு கொண்டாடும் இந்திய தாய் திருநாட்டில் அப்போது வசிக்கும் மக்களும் இந்த நாளை பெருமையோடு நினைவுகூர்வார்கள். ஆதித்யா எல்-1 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கும் இஸ்ரோவின் அடுத்தடுத்த ஆராய்ச்சிகள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

100 மீட்டர் ரோவர் பயணம்

தொடர்ந்து விஞ்ஞானிகளிடையே இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் பேசும்போது, 'ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக சரியான சுற்றுவட்டப்பாதையில் உள்ளது. அடுத்தடுத்த நிலைகளில் அதன் சுற்றுவட்டப்பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு எல்-1 பகுதியை நோக்கி பயணிக்கும்.

சந்திரயான்-3 மூலம் நிலவில் தரையிறங்கியுள்ள லேண்டர் மற்றும் ரோவர் சிறப்பாக ஆராய்ந்து வருகிறது. ரோவர் வாகனம் வெற்றிகரமாக 100 மீட்டர் தூரம் பயணித்துள்ளது. இன்னும் 2 நாள் அதன் பணியை மேற்கொண்டு அதன் பின் உறக்க நிலைக்கு செல்லும்' என்றார்.

125 நாட்கள் பயணம்

தென்காசியை சேர்ந்த திட்ட இயக்குனர் நிஹார் ஷாஜி கூறும்போது, 'ஆதித்யா எல்-1 வெற்றி மூலம் கனவு நனவாகி உள்ளது. எப்போதும் போல் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் உதவியுடன் ஆதித்யா எல்-1 விண்கலம் 125 நாட்கள் பயணத்தை தொடங்கி உள்ளது. இறுதியாக ஒளி வட்டப்பாதைக்கு செல்லும்.

ஆதித்யா எல்-1 முழுமையான தன்னுடைய ஆய்வு பணியை தொடங்கிய பின்னர் நம் நாட்டிலும், உலக அளவிலும் ஹீலியம் கிடைப்பதற்கான பெரிய சொத்தாக இருக்கும். இந்த பணியின் ஒரு பகுதியாக இருப்பதை நான் பெருமையாகவும், பாக்கியமாகவும் உணர்கிறேன்' என்றார்.

புதிய பணிகள்

பி.எஸ்.எல்.வி. திட்ட இயக்குனர் பிஜூ கூறுகையில், 'விஞ்ஞானிகள் அனைவரின் அர்ப்பணிப்பு முயற்சியின் காரணமாக இந்த வெற்றியை பெற்றுள்ளோம். தொடர்ந்து பி.எஸ்.எல்.வி. புதிய பணிகளைச் செய்யும் திறன் கொண்டது' என்றார்.


Next Story