கர்நாடகம் வளர்ச்சி அடைய ஜனதாதளம் (எஸ்) கட்சியை ஆதரியுங்கள்


கர்நாடகம் வளர்ச்சி அடைய ஜனதாதளம் (எஸ்) கட்சியை ஆதரியுங்கள்
x
தினத்தந்தி 26 Nov 2022 9:30 PM GMT (Updated: 26 Nov 2022 9:58 PM GMT)

கர்நாடகம் வளர்ச்சி அடைய ஜனதாதளம்(எஸ்) கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று மக்களுக்கு குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோலார் தங்கவயல்-

பஞ்சரத்னா யாத்திரை

கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2023) நடக்கிறது. இதையொட்டி ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பஞ்சரத்னா யாத்திரை என்ற பெயரில் கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று இந்த யாத்திரை சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளிக்கு வந்தது. இதில் குமாரசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைய முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தான் காரணம். அவரது ஆதரவாளர்கள் தான் பா.ஜனதாவில் சேர்ந்து கூட்டணி ஆட்சியை கவிழ்த்தனர். கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வர சித்தராமையா மறைமுகமாக ஆதரவு அளித்தார். கூட்டணி ஆட்சி கவிழ முழுக்க முழுக்க சித்தராமையா தான் காரணம்.

கர்நாடகம் வளர்ச்சி அடைய...

யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை உருவாகும் நிலை வரக்கூடாது. அவ்வாறு தொங்கு சட்டசபை வந்தால், ஆட்சி நடத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் மக்கள் வளர்ச்சி பணிகள் பாதிக்கும். இந்த நிலையை வாக்காளர்கள் மாற்ற

வேண்டும். அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபை ஏற்படாமல், ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆட்சி அமைக்க வாக்காளர்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

மாநில கட்சியால் மட்டுமே மாநிலத்தை வளர்ச்சி அடைய செய்ய முடியும். இதனால் மக்கள் தேசிய கட்சிகளை புறக்கணிக்க வேண்டும். கர்நாடகம் வளர்ச்சி அடைய ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். நகரப்பகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் ஆட்சியாளர்கள், கிராமப்புறங்களை புறக்கணித்து விடுகிறார்கள். நகரங்கள் மட்டும் தான் மாநிலத்துக்குள் உள்ளதா. கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பாவம் செய்துவிட்டார்களா. இதனால் வரும் தேர்தலில் பா.ஜனதாவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

அவ்வாறு அவர் கூறினார்.


Next Story