திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான இளம்பெண் தனது 24 வார கர்ப்பத்தை கலைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி!


திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான இளம்பெண் தனது 24 வார கர்ப்பத்தை கலைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி!
x
தினத்தந்தி 22 July 2022 4:01 AM GMT (Updated: 22 July 2022 4:02 AM GMT)

திருமணமாகாத பெண் 24 வாரங்களில் கர்ப்பத்தை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்தது.

புதுடெல்லி,

டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து, 24 வார கர்ப்பத்தை கலைக்கக் கோரி, இளம்பெண் ஒருவர் தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.

திருமணமாகாத பெண், தனது ஆண் துணைவருடன் ஒருமித்த உறவின் மூலம் கர்ப்பம் தரித்தால், 2003ஆம் ஆண்டு மருத்துவக் கருவுறுதல் விதிகளின் கீழ் வராது என்று டெல்லி ஐகோர்ட் கூறியது.

ஆனால் இந்த கருத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை.கருக்கலைப்பிற்கான மருத்துவ விதிகளின் விதிகளை டெல்லி ஐகோர்ட் தேவையற்ற கட்டுப்பாட்டுடன் பார்வையிட்டது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை பிறப்பித்தது.

கருக்கலைப்புக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனரை மருத்துவ குழு ஒன்று அமைக்க உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழுவிற்கு உட்பட்டு, பெண்ணின் உயிருக்கு ஆபத்து இல்லாமல் கருவை கலைக்க முடியும் என்று மருத்துவ குழு சான்றளித்தால் 24 வார கர்ப்பத்தை கலைக்க பெண் அனுமதிக்கப்படுவார்.

ஒரு விதவை அல்லது விவாகரத்து பெற்ற பெண் 20-24 வாரங்களுக்குள் கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்கப்படுவார்கள். அதேவேளையில், திருமணமாகாத பெண் என்ற காரணத்திற்காக மனுதாரருக்கு சலுகை மறுக்கப்படக் கூடாது என்று கோர்ட்டு உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

"மனுதாரரின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் கருவை கலைக்க முடியும் என்று மருத்துவ வாரியம் முடிவு செய்தால், எய்ம்ஸ் மருத்துவர்கள் கருக்கலைப்பை மேற்கொள்ளலாம்" என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Next Story