குட்கா நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்..!

புகையிலை பொருட்களுக்கான தடை ரத்து தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கில் குட்கா நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குட்கா நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்..!
Published on

புதுடெல்லி,

கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டுதோறும் இதுசம்பந்தமாக அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து கடந்த மாதம் 25-ந்தேதி தீர்ப்பளித்தது. சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் ஜோசப் அரிஸ்டாட்டில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 17-ந்தேதி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது குட்கா பொருட்களுக்கு பல ஆண்டுகளாக இருந்த தடை நீக்கப்பட்டது பல விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மக்களின் சுகாதாரம் சார்ந்த விஷயம் என்பதால் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் குட்கா தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக வரும் 20-ந் தேதிக்குள் குட்கா, பான்மசாலா நிறுவனங்க பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி வழக்கு விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கயை ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com