கர்நாடகத்தில் பால் விலை உயர்வு நிறுத்திவைப்பு; அரசு அதிரடி உத்தரவு


கர்நாடகத்தில் பால் விலை உயர்வு நிறுத்திவைப்பு; அரசு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 14 Nov 2022 6:45 PM GMT (Updated: 14 Nov 2022 6:45 PM GMT)

கர்நாடக பால் கூட்டமைப்பு அறிவித்த பால் விலை உயர்வை நிறுத்திவைத்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி 20-ந்தேதிக்கு பிறகு ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

பெங்களூரு:

பால் விலையை உயர்த்த கோரிக்கை

கர்நாடக பால் கூட்டமைப்பு சார்பில் நந்தினி பெயரில் பால், தயிர், நெய் போன்ற பல்வேறு வகையான பால் பொருட்கள் கடைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு, அதன் மூலம் மக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. கர்நாடகத்தில் உள்ள 16 பால் கூட்டுறவு சங்கங்கள், பால் விலையை உயர்த்த கோரி கர்நாடக பால் கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து பால் கூட்டமைப்பின் தலைவரான பாலச்சந்திர ஜார்கிகோளி எம்.எல்.ஏ. சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்துமாறு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக கூறினார்.

ஆனால் அவற்றுக்கு முதல்-மந்திரி அனுமதி வழங்காமல் இருந்து வந்தார். 8 மாதங்களாக பால் விலை உயர்வு குறித்து எந்த நடவடிக்கையும் அரசு எடுக்காமல் இருந்ததால் பால் உற்பத்தியாளர்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்த வேண்டும் என்று கர்நாடக பால் கூட்டமைப்பு கர்நாடக அரசுக்கும், முதல்-மந்திரி பசவராஜ்பொம்மைக்கும் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் பால் விலை உயர்வு பட்டியலையும் இணைத்து அனுப்பியுள்ளது.

அந்த விலை பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பால் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள விலை பட்டியலில் கூறியிருப்பதாவது:-

கொழுப்பு நீக்கிய பால்

கர்நாடகத்தில் நந்தினி பால் விலையை உயர்த்தியுள்ளோம். லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி இருக்கிறோம். தற்போது ஒரு லிட்டர் பால் ரூ.37-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் விலை ரூ.40 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

கொழுப்பு நீக்கப்பட்ட பால் விலை ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆகவும், கொழுப்பு நீக்கப்பட்ட பசும்பால் ரூ.42-ல் இருந்து ரூ.45 ஆகவும், ஸ்பெஷல் பால் ரூ.43-ல் இருந்து ரூ.46 ஆகவும் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

சுபம் பால் ரூ.43-ல் இருந்து ரூ.46 ஆகவும், சம்ருத்தி பால் ரூ.48-ல் இருந்து ரூ.51 ஆகவும், சந்திருப்தி பால் ரூ.50-ல் இருந்து ரூ.53 ஆகவும், இரட்டை டோன்டு பால் ரூ.36-ல் இருந்து ரூ.39 ஆகவும், தயிர் ஒரு கிலோ ரூ.45-ல் இருந்து ரூ.48 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காரணம் என்ன?

பால் விலையை உயர்த்தப்படுவதற்கான காரணம் குறித்து பால் கூட்டமைப்பு நிர்வாகி ஒருவர் கூறுகையில், கர்நாடக பால் கூட்டமைப்பு விவசாயிகளிடம் இருந்து பால் லிட்டருக்கு ரூ.29-க்கு கொள்முதல் செய்து வந்தது. இது தவிர விவசாயிகளுக்கு பால் லிட்டருக்கு 5 ரூபாயை அரசு மானியமாக வழங்கி வருகிறது. தற்போது மோசமான வானிலை காரணமாக மாட்டு தீவனங்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது.

இதனால் அதன் விலை உயர்ந்துவிட்டது. மேலும் மாடுகள் தோல் நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் போக்குவரத்து, மின்சாரம், பால் பாக்கெட்டுகள் பேக்கிங் செலவு 25 முதல் 35 சதவீதம் உயர்ந்துள்ளது. எனவே பால் விலையை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று பால், தயிர் விலையை கர்நாடக அரசு உயர்த்த வேண்டும். உயர்த்தப்பட்ட விலை விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடக அரசு மறுப்பு

இந்த பால் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கன்னட தொலைக்காட்சிகளில் செய்திகள் ெவளியானது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இதனை கர்நாடக அரசு மறுத்துள்ளது.

இதுகுறித்து முதல்-மந்திரியிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, "கர்நாடக பால் கூட்டமைப்பு பால் விலையை உயர்த்துமாறு கோரியுள்ளது. இதுபற்றி ஆலோசித்து வருகிறோம். அதற்குள் பால்கூட்டமைப்பு பால் விலை உயர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதை நிறுத்திவைக்கும்படி பால் கூட்டமைப்புக்கு கோரிக்கை விடுத்தோம். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளது. கர்நாடகத்தில் பால் விலையை உயர்த்துவது தொடர்பாக வருகிற 20-ந் தேதிக்கு பிறகு ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும்" என்றார்.

பொதுமக்கள் அச்சம்

ஏற்கனவே விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் பால் விலை உயர்த்தப்பட்டால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


Next Story