டெல்லி பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்திக்கு பதிலாக சாவர்க்கர் பற்றிய பாடம் - கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானம்


டெல்லி பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்திக்கு பதிலாக சாவர்க்கர் பற்றிய பாடம் - கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானம்
x

மகாத்மா காந்தி குறித்த பாடம் 5-வது செமஸ்டரில் இருந்து 7-வது செமஸ்டருக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி பல்கலைக்கழக இளங்கலை (பி.ஏ.) அரசியல் அறிவியல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு 5-வது செமஸ்டரில் மகாத்மா காந்தி குறித்து ஒரு பாடம் உள்ளது. இதை ரத்து செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு பதிலாக சாவர்க்கர் குறித்த பாடத்தை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் மகாத்மா காந்தி குறித்த பாடம் 7-வது செமஸ்டருக்கு மாற்றப்பட்டு உள்ளது.

இதனால் 3 ஆண்டு பட்டப்படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள், காந்தி குறித்த பாடத்தை படிக்க இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பல்கலைக்கழக நிர்வாக கவுன்சில் இதற்கு ஒப்புதல் அளித்தால் இது அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்து பாகிஸ்தான் தேசிய கவிஞர் என புகழ்பெற்றவரும், 'சாரே ஜஹான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா' பாடலை எழுதியவருமான முகமது இக்பால் பற்றிய பாடத்தையும் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்விக்குழு கூட்டத்தில் டெல்லி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் யோகேஷ் கூறுகையில், 'இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தை இட்டவர்களுக்கு பாடத்திட்டத்தில் இடமில்லை' என்று கூறினார்.

அதே சமயம் டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு ஒரு பிரிவு ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. கல்வியை காவிமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story