தூக்க மாத்திரை சாப்பிட்டு, கையை அறுத்து மாணவி தற்கொலை முயற்சி; கல்லூரி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு; உறவினர்கள் போராட்டம்


தூக்க மாத்திரை சாப்பிட்டு, கையை அறுத்து   மாணவி தற்கொலை முயற்சி; கல்லூரி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு; உறவினர்கள் போராட்டம்
x

மைசூருவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு, கையை அறுத்து மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவர் கல்லூரி நிர்வாகம் மீது குற்றம்சாட்டினார். இதனால் உறவினர்கள் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மைசூரு;

மாணவி தற்கொலை முயற்சி

மைசூரு டவுன் ஜெயலட்சுமிபுரம் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது பெற்ேறாருடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் கல்லூரியில் தேர்வு நடக்க இருந்தது.

ஆனால் கல்லூரி நிர்வாகம் அந்த மாணவிக்கு ஹால்டிக்கெட் வழங்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அந்த மாணவி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி அவர் தூக்க மாத்திரையை சாப்பிட்டும், கையை அறுத்துக் கொண்டும் தற்கொலைக்கு முயன்றார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், மாணவியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கல்லூரி மீது குற்றச்சாட்டு

இதற்கிடையே அவர் தற்கொலைக்கு முயற்சி செய்வதற்கு முன்பு கல்லூரி மீது குற்றம்சாட்டி தனது செல்போனில் ஒரு வீடியோவை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், 'எனக்கு கல்லூரியில் ரொம்ப தொந்தரவு கொடுக்கப்பட்டு வருகிறது. கல்லூரியில் பாகுபாடு பார்க்கிறார்கள். நான் சரியாக வகுப்புக்கு சென்றாலும் வரவில்லை என்று ஆப்சென்ட் மார்க் செய்கிறார்கள். எங்களது குறைகளை கூறினாலும் அதனை கேட்பதில்லை. தேர்வு எழுத ஹால்டிக்கெட்டும் கொடுக்காமல் நிராகரிக்கிறார்கள்.

ஹால் டிக்கெட் வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். கல்லூரி முதல்வரிடம் எவ்வளவு கெஞ்சியும் ஹால் டிக்கெட் கொடுக்கவில்லை. என்னை தேர்வு எழுத விடாமல் தடுக்கிறார்கள். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனது சாவுக்கு கல்லூரியும், கல்லூரி முதல்வரும் தான் காரணம்' என்று பேசி உள்ளார்.

போராட்டம்

இந்த நிலையில் நேற்று மாணவியின் உறவினர்கள் மற்றும் அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கல்லூரிக்கு சென்று திடீரென்று போராட்டம் நடத்தினர். கல்லூரி முதல்வர் மீதும், கல்லூரி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஜெயலட்சுமிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து ஜெயலட்சுமிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story