வாடிக்கையாளர் போல் பேசி வங்கி மேலாளரிடம் ரூ.62 லட்சம் மோசடி


வாடிக்கையாளர் போல் பேசி வங்கி மேலாளரிடம் ரூ.62 லட்சம் மோசடி
x

உப்பள்ளியில் வாடிக்கையாளர் போல் பேசி வங்கி மேலாளரிடம் ரூ.62 லட்சம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உப்பள்ளி;

வாடிக்கையாளர் போல் நடிப்பு

தார்வார் மாவட்டம் உப்பள்ளி ரெயில்வே நிலைய சாலையில் வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக பணியாற்றி வருபவர் வினய்குமார். வங்கி வாடிக்கையாளர்கள் அவ்வப்போது மேலாளர் வினய்குமாரிடம் பணப் பரிமாற்றம் செய்வது வழக்கம்.

அதாவது வங்கியில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிற்கு பணம் அனுப்பி வைக்கும்படி கூறுவார்கள். அதை ஏற்று மேலாளர் வினய்குமார் பணத்தை அவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைப்பார்.

பின்னர் அந்த வாடிக்கையாளர், வங்கியில் அல்லது மேலாளரிடம் வாங்கிய பணத்தை திரும்ப வந்து கொடுத்துவிடுவார்கள். அல்லது ஆன்லைன் வாயிலாக திரும்ப செலுத்திவிடுவார்கள்.

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு வாடிக்கையாளர் ஒருவர் பல லட்சம் ரூபாய் பணம் கேட்டார். அந்த வாடிக்கையாளர் தனக்கு நன்கு தெரிந்த நபர் என்பதால், உடனே மேலாளர் வினய்குமார், அவர் கேட்ட பணத்தை அனுப்பி வைத்தார்.

ரூ.62 லட்சம் மோசடி

இந்த பணப்பரிமாற்றம் நடந்த சில மணி நேரத்தில், மற்றொரு வாடிக்கையாளர் ஒருவர் செல்போனில் மேலாளர் வினய்குமாரை தொடர்பு கொண்டு ரூ.62 லட்சம் கேட்டார். அந்த நபர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று மேலாளர் வினய் குமார் விசாரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

வழக்கமான வாடிக்கையாளர்தான் என்று நினைத்து கொண்ட மேலாளர் வினய்குமார் அந்த நபர் கேட்ட பணம் ரூ.62 லட்சத்தை அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துவிட்டார். பல நாட்கள் ஆகியும் அந்த வாடிக்கையாளரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

செல்போனை தொடர்பு கொண்டு பார்த்தபோது, அந்த நபர் வங்கி வாடிக்கையாளர் இல்லை. யாரோ அடையாளம் தெரியாத நபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்டு மேலாளர் வினய் குமார் பேச முயற்சித்தார். அப்போது அந்த செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து தான் ஏமாற்றம் அடைந்ததை அறிந்த வங்கி மேலாளர் இது குறித்து உடனே உப்பள்ளி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரை ஏற்ற போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story