குமாரசாமியுடன் பேசியது உண்மை தான்- பா.ஜனதா முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி
பா.ஜனதாவை விட்டு விலக மாட்டேன் என்றும், குமாரசாமியுடன் பேசியது உண்மை தான் என்றும் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: பா.ஜனதாவை விட்டு விலக மாட்டேன் என்றும், குமாரசாமியுடன் பேசியது உண்மை தான் என்றும் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தெரிவித்துள்ளார்.
ஜனதாதளம் (எஸ்) கட்சியில் சேர...
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து, பா.ஜனதா ஆட்சி அமைய காரணமாக இருந்தவர் ரமேஷ் ஜார்கிகோளி. பா.ஜனதா ஆட்சி அமைந்ததும் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்த அவர், இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ வெளியானதை தொடர்ந்து மந்திரி பதவியை ராஜினாமா செய்திருந்தார். ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் அவருக்கு மீண்டும் மந்திரி பதவி வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக பா.ஜனதா தலைவர்கள் மீது அதிருப்தியில் இருக்கும் ரமேஷ் ஜார்கிகோளி, ஜனதாதளம் (எஸ்) கட்சியில் சேர இருப்பதாகவும், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியுடன் இதுபற்றி தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது. இதகுறித்து பெலகாவியில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
பேசியது உண்மை தான்
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியுடன் நான் பேசியது உண்மை தான். குமாரசாமி தினமும் என்னை தொடர்பு கொண்டு பேசி வருகிறார். சில விஷயங்கள் குறித்து 2 பேரும் பேச்சு வார்த்தை நடத்தி இருந்தோம். ஆனால் பா.ஜனதாவில் இருந்து விலகி ஜனதாதளம் (எஸ்) கட்சியில் சேர விரும்பவில்லை. பா.ஜனதா கட்சியை விட்டு ஒரு போதும் விலக மாட்டேன். பா.ஜனதாவிலேயே இருப்பேன். கடந்த ஒரு ஆண்டாக சில தவிர்க்க முடியாத காரணங்களால் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை.
அடுத்த ஆண்டு (2023) பா.ஜனதாவில் முக்கிய 10 தலைவர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். அவ்வாறு முக்கிய தலைவராக நான் இருந்தால், யாருக்கு வேண்டுமானாலும் மந்திரி பதவி, தேர்தலில் போட்டியிட டிக்கெட் வாங்கி கொடுக்க என்னால் முடியும். அப்படி இருக்கும் பட்சத்தில் பா.ஜனதாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.