கர்நாடகத்தில் முதல்முறையாக தமிழ் புத்தக திருவிழா இன்று தொடக்கம்


கர்நாடகத்தில் முதல்முறையாக தமிழ் புத்தக திருவிழா இன்று தொடக்கம்
x

கர்நாடகத்தில் முதல்முறையாக நடக்கும் தமிழ் புத்தக திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதனை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைக்கிறார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் முதல்முறை

கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம், கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் இணைந்து கர்நாடகத்தில் முதல்முறையாக தமிழ் புத்தக திருவிழாவை நடத்த உள்ளது. டிசம்பர் 25-ந் தேதி (அதாவது இன்று) முதல் ஜனவரி 1-ந் தேதி வரை 8 நாட்கள் பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் உள்ள பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் தமிழ் புத்தக திருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த தமிழ் புத்தக திருவிழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ் புத்தக திருவிழா குழு தலைவர் வணங்காமுடி மற்றும் அவரது குழுவினர் செய்து இருந்தனர். இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தபடி பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இந்த தமிழ் புத்தக திருவிழாவை விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைக்கிறார்.

மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள்

இதன்பின்னர் தமிழ் புத்தக திருவிழா சிறப்பு மலர் வெளியீடு, பள்ளி, கல்லூரி மாணவர்கள் 2 ஆயிரம் பேருக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதில் பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம்பிரசாத் மனோகர், ஒடிசா முதல்-மந்திரியின் சிறப்பு ஆலோசகர் பாலகிருஷ்ணன், பாபா அணு ஆராய்ச்சி கழகத்தின் முதுநிலை விஞ்ஞானி தவமணி, பெங்களூரு மத்திய தொகுதி எம்.பி. பி.சி. மோகன், சிவாஜிநகர் எம்.எல்.ஏ. ரிஸ்வான் ஹர்ஷத், பெங்களூரு மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆனந்த்குமார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

தொழில் அதிபர் பாலசுந்தரம், தனஅபிவிருத்தி கடன் கூட்டுறவு வங்கியின் நிறுவனர் சுந்தரவேலு, சன்ரைஸ் அருணாச்சலம் நிறுவனத்தின் மேலாண் பங்குதாரர் நரசிம்மன், ஆர்.ஆர்.இன்டஸ்ட்ரீஸ் தலைவர் துரை ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர். நிகழ்ச்சியின் வரவேற்புரையை கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் தனஞ்ஜெயன் என்கிற வெற்றிசெல்வன் ஆற்ற உள்ளார். நிகழ்ச்சியின் நோக்க உரையை தமிழ் புத்தக திருவிழா குழு தலைவர் வணங்காமுடி ஆற்றுகிறார்.

சிந்தனை களம்

இலவச புத்தகங்கள் திட்ட அறிமுக உரையை எஸ்.எஸ்.பேப்காம் இந்தியா பிரைவேட் லிமிடெட் மேலாண் இயக்குனர் மோகன், சிறப்பு மலர் அறிமுக உரையை தமிழ் புத்தக திருவிழா சிறப்பு மலர் குழுவின் ஆசிரியர் இளங்கோவன் ஆற்ற உள்ளார். இதனை தொடர்ந்து மலர்மன்னன் எழுதிய வள்ளலாரின் ஆன்மநேய ஒருமைப்பாடு என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. இதன்பின்னர் கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் கார்த்தியாயினி நன்றியுரை ஆற்றுகிறார்.

இதன்பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 6.30 மணி வரை தமிழால் இணைவோம் என்ற பெயரில் சிந்தனைகளம் நடைபெற உள்ளது. பெங்களூருவில் சுங்கத்துறையில் கூடுதல் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற மணிவாசகம் தலைமையில் நடக்கும் சிந்தனை களத்தில் தமிழ் அரசின் சிறந்த எழுத்தாளர் விருது உள்பட 10 விருதுகள் பெற்ற 85 நூல்களின் ஆசிரியர் எழுத்தாளர் அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு சிந்தனை உரை ஆற்ற உள்ளார். கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்க துணை தலைவர் சம்பத் நன்றி உரை ஆற்றுகிறார்.

புத்தக அரங்கு

ஸ்ரீசெந்தில்குமரன் வெங்கடேஸ்வரா பள்ளிக்குழுமத்தின் நிறுவனர் லட்சுமிபதி, பிரசாந்தி முதியோர் நலவாழ்வு இல்லத்தின் நிறுவனர் ராஜகோபால பாலாஜி, ஸ்ரீபுவனேஸ் என்ஜினீரியங் ஒர்க்சின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீபாலாஜி இன்ஸ்டஸ்ட்ரீஸ் என்ஜினீரியங் உரிமையாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர். தமிழ் புத்தக திருவிழாவையொட்டி பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் தினந்தந்தி உள்பட 25 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.


Next Story