தஞ்சை பள்ளி மாணவி வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்


தஞ்சை பள்ளி மாணவி வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்
x

தஞ்சை பள்ளி மாணவி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவி, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவியை விடுதி அறைகளை சுத்தம் செய்ய வற்புறுத்தி மன உளைச்சல் ஏற்படுத்தியதாக விடுதி வார்டன் சகாயமேரியை (62) போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாற கட்டாயப்படுத்தியதாக மாணவி பேசியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், மாணவி மரணம் தொடர்பாக உயர்நீதி்மன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கட்டாய மதமாற்ற நிர்பந்தத்தால் மாணவி தற்கொலை எனக் கூறுவது நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துவதாகும். அனைத்து மாநிலங்களிலும் மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக கூறப்படுவது பொய்யான தகவல், மத ரீதியில் தூண்டப்பட்டு போடப்பட்ட இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story