தினமும் 60 கி.மீ தூரம் நெடுஞ்சாலை அமைக்க இலக்கு நிர்ணயம் - மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்


தினமும் 60 கி.மீ தூரம் நெடுஞ்சாலை அமைக்க இலக்கு நிர்ணயம் - மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்
x

நடப்பு நிதியாண்டில் நெடுஞ்சாலை கட்டுமானத்தின் இலக்காக 12,000 கி.மீ நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியின் குர்கிராமில் நடந்த தொழில் முனைவோர் கூட்டத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசியதாவது:-

சிறந்த சாலை உள்கட்டமைப்பு வசதிகளே அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. அந்த வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் ஆகியவை நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளை நிர்மாணிப்பதில் முக்கிய பங்காற்றி வருகின்றன.

நடப்பு நிதியாண்டில் மட்டும் நெடுஞ்சாலை கட்டுமானத்தின் அதிகாரப்பூர்வ இலக்காக 12,000 கிலோ மீட்டர் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே 2019-20ல் 10,237 கிலோமீட்டர், 2020-21ல் 13,327 கிலோமீட்டர், 2021-22ல் 10,457 கிலோ மீட்டராக இருந்தது. தினமும் 40 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு நெடுஞ்சாலைகள் போட வேண்டும் என்ற திட்டத்துடன் இலக்கு நிர்ணயம் செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.

2020-21ம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தின் வேகம் ஒரு நாளுக்கு 37 கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் கொரோனா கால இடையூறுகளால் ஒரு நாளைக்கு 28.64 கிலோ மீட்டர் அளவில் சாலைகள் அமைக்கப்பட்டன. கொரோனா கால இடையூறுகள் முடிந்ததால் தினமும் 60 கி.மீ தூரம் நெடுஞ்சாலை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story