மத்திய அரசு பணக்காரர்களுக்கு வரியை தள்ளுபடி செய்து ஏழை மக்கள் மீது வரிகளை சுமத்துகிறது- அரவிந்த் கெஜ்ரிவால்
உணவு பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பணக்காரர்களுக்கு வரிகளை தள்ளுபடி செய்து ஏழை மக்கள் மீது வரிகளை சுமத்துவதாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
இலவசங்களை வாக்குறுதிகளாக அளித்து வாக்குகள் கோரப்படுவது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என பிரதமர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து பாஜக தலைவர்கள் கெஜ்ரிவாலின் இலவச அறிவிப்புகளை கடுமையாக சாடினர்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள கெஜ்ரிவால், "இலவசங்கள் என்று பாஜக அழைக்கும் தனது அரசாங்கத்தின் திட்டங்கள் மக்கள் வறுமையில் இருந்து வெளியே வர உதவியுள்ளது. மேலும் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற தரமான சேவைகள் ஏழை எளிய மக்களைச் சென்றடைவதை உறுதி செய்துள்ளது" என தெரிவித்தார்.
மேலும் பேசிய கெஜ்ரிவால், "நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாட உள்ளோம். ஆனால் தற்போது ஏழை மக்களின் உணவுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கொடுமையான செயல்" என பேசினார்.