ராஜஸ்தான்: பள்ளி மாணவனை தனி அறையில் அடைத்து தாக்கிய புகாரில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் கைது!


ராஜஸ்தான்: பள்ளி மாணவனை தனி அறையில் அடைத்து தாக்கிய புகாரில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் கைது!
x

மாணவர் ஒருவரை அடித்து தாக்கியதாக ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர்,

பள்ளி மாணவர் ஒருவரை அடித்து தாக்கியதாக தனியார் பள்ளியின் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் ரிங்கஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் கடந்த புதன்கிழமை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

சம்பவத்தன்று பள்ளியின் பிரார்த்தனைக் கூட்டத்தின் போது, 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வரிசையில் சரியாக நிற்க வேண்டும் என்ற அறிவுறுத்தலைப் பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது.இதை கவனித்த ஆசிரியர் ஒருவர் அந்த மாணவனை அறைந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு மாணவர் எதிர்ப்பு தெரிவித்ததால், புகார் தலைமை ஆசிரியருக்கு சென்றது. பின், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் அந்த மாணவனை தனி அறைக்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கி உள்ளனர் என்று பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவனை அடித்து தாக்கிய ஆசிரியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், அன்றைய தினம் அந்த மாணவன் தன்னை அறைந்ததாகக் கூறி அப்பள்ளியின் மற்றொரு ஆசிரியர் மாணவன் மீது போலீசில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவனின் குடும்பத்தினர் மற்றும் பள்ளியின் மற்றொரு ஆசிரியர் ஆகியோர் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் போலீஸ் தரப்பில் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இரண்டு வழக்குகளும் விசாரிக்கப்படுகின்றன என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story