மாநகராட்சி பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் தகுதியில்லாத ஆசிரியர்களை நீக்க முடிவு; தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் பேட்டி

மாநகராட்சி பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் தகுதியில்லாத ஆசிரியர்களை நீக்க முடிவு; தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் பேட்டி
x

பெங்களூரு மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் தகுதியில்லாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் தகுதியில்லாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

10 சதவீதம் தேர்ச்சி குறைவு

பெங்களூரு மாநகராட்சியின் கீழ் இருக்கும் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை நியமனம் செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது பற்றி விசாரணையில் தெரியவந்துள்ளது. போதிய கல்வி தகுதியில்லாதவர்களும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தகுதியில்லாத ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் பள்ளி, கல்லூரிகளில் நியமனம் செய்தவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

நடப்பு கல்வி ஆண்டில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளில் படித்த மாணவ, மாணவிகளின் தேர்ச்சி 10 சதவீதம் குறைந்துள்ளது. பி.யூ.சி மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளின் போதும் இது நிரூபணமாகி இருக்கிறது.

தகுதியில்லாத ஆசிரியர்கள் நீக்கம்

இதன் காரணமாக மாநகராட்சியின் பள்ளி, கல்லூரிகளில் தகுதியில்லாத ஆசிரியர்களை நீக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். சுமார் 180 ஆசிரியர்கள் தகுதியில்லாமல் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. அவர்களை நீக்குவதற்கு முடிவு செய்துள்ளோம்.

சில அதிகாரிகளின் கவனக்குறைவு, அலட்சியம் காரணமாக மாணவர்களின் கல்விக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தை மாநகராட்சி தீவிரமாக எடுத்து, தகுதியில்லாத ஆசிரியர்களை நீக்கிவிட்டு, புதிய ஆசிரியர்களை நியமித்து தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story