தெலுங்கானா: ஆளும் கட்சி எம்.எல்.ஏ. சுங்க சாவடியில் ஊழியர் மீது தாக்குதல்; பரபரப்பு வீடியோ


தெலுங்கானா:  ஆளும் கட்சி எம்.எல்.ஏ. சுங்க சாவடியில் ஊழியர் மீது தாக்குதல்; பரபரப்பு வீடியோ
x

தெலுங்கானாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. சுங்க சாவடியில் ஊழியர் ஒருவரை தாக்கும் காட்சிகள் கொண்ட பரபரப்பு வீடியோ வெளிவந்து உள்ளது.


ஐதராபாத்,


தெலுங்கானாவில் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியை சேர்ந்த பெல்லம்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ. துர்கம் சின்னையா.

இவர் மஞ்சேரியல் மாவட்டத்தின் மண்டமரி சுங்க சாவடி வழியே கடந்து செல்லும்போது, அவரது காரை ஊழியர்கள் வழக்கம்போல் நிறுத்தியுள்ளனர். இதில், காரை விட்டு கீழே இறங்கிய எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுங்க சாவடி பணியாளர்களை நெருங்கினர்.

இதன்பின், எம்.எல்.ஏ.வை நெருங்கிய பணியாளர் ஒருவரை துர்கம் அடிக்க சென்றுள்ளார். இதனை அவரது ஆதரவாளர்கள் தடுத்து, சமரசப்படுத்தி அழைத்து சென்றனர்.

அதன்பின்பு, அவர் காரில் ஏறாமல் அந்த வழியே நடந்து சென்று சுங்க சாவடியின் இணை பாதையில் வந்த சரக்கு வேன் ஒன்றை, கையசைத்து முன்னே செல்லும்படி கூறினார். அந்த வேன் சென்ற பின்னர், தனது காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இந்த காட்சிகள் வீடியோவாக வெளிவந்து வைரலாகி உள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் பணிகள் முடிக்கப்படாமல் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற ஆத்திரத்தில் அவர் இருந்துள்ளார் என கூறப்படுகிறது.

எனினும், இதுபற்றி மண்டமரி வட்ட காவல் ஆய்வாளர் செய்தியாளர்களிடம் கூறும்போது, சமூக ஊடகத்தில் இந்த வீடியோவை பார்த்தோம். எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்து உள்ளார்.


1 More update

Next Story