2-வது முனையத்தில் அடுத்த மாதம் விமான சேவை தொடக்கம்?
கெம்பேகவுடா விமான நிலையத்தில் 2-வது முனையத்தில் அடுத்த மாதம் விமான சேவை தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தேவனஹள்ளி:-
பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் நிலையம் உள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விமான நிலையத்தின் 2-வது முனையத்தை கடந்த மாதம் (நவம்பர்) முன்பு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த முனையம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. வருகிற 29-ந்தேதி முதல் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2-வது முனையத்தில் இருந்து முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் புதிய முனையத்தில் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விமான நிலைய நிர்வாகம் சார்பில் கூறுகையில், விமான நிலையத்தின் 2-து முனைய கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இந்த மாத இறுதிக்குள் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வர இருந்தது. ஆனால் பணிகள் நிறைவடையாததால் அடுத்த மாதம் முதல் விமான சேவை வழங்கப்படும் என்றார். மேலும் அவர் கூறுகையில், 'அடுத்த மாதத்தில் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விமான சேவை தொடங்குவதில் மாற்றப்பட வாய்ப்புள்ளது. எனினும் இதுகுறித்து முறையான அறிக்கை விமான நிலையம் சார்பில் வெளியிடப்படும்' என்றார்.