பெல்தங்கடி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ


பெல்தங்கடி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ
x
தினத்தந்தி 11 March 2023 6:45 AM GMT (Updated: 11 March 2023 6:45 AM GMT)

பெல்தங்கடி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகிறார்கள்.

மங்களூரு-

கர்நாடகத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பல்வேறு வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் சசிலா, ஷிபாஜே கிராமங்களையொட்டி உள்ள வனப்பகுதியில் திடீரென்று காட்டுத்தீ ஏற்பட்டது. அந்த தீ, அங்குள்ள மரம், செடி-கொடிகளுக்கு பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர்.

பின்னர் தீயணைப்பு படையினர், வனத்துறையினர், கிராம மக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் தீ, கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரிவதால், அதனை அணைக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இதுவரை 4,800 ஹெக்டேரில் மரங்கள், செடி-கொடிகள் எரிந்து நாசமாகி விட்டன. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.



Next Story