சார்மடி மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ
சார்மடி மலைப்பகுதியில் திடீரென்று ஏற்பட்ட காட்டுத்தீயால் 10 ஏக்கரில் மரங்கள், செடிகள் உள்ளிட்ட வனப்பகுதி எரிந்து நாசமானது.
சிக்கமகளூரு:-
சார்மடி மலைப்பகுதி
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவில் உள்ளது சார்மடி மலைப்பகுதி. சுற்றுலா தலமாக திகழ்ந்து வரும் இந்த மலைப்பகுதிக்கு மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக மலை ஏறுவதில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த சார்மடியை தேர்வு செய்வார்கள். அந்த அளவிற்கு இந்த சார்மடி மலைப்பகுதியில் இயற்கை காட்சிகள் கொட்டி கிடக்கிறது. இந்நிலையில் நேற்று இந்த சார்மடி மலையில் திடீரென்று காட்டுத்தீ பிடித்தது. யார் தீ வைத்தார்கள் என்பது தெரியவில்லை. இதில் கொழுந்து விட்டு எரிந்த தீ மூலிகை செடிகள், மரங்கள், செடி, கொடிகளில் பிடித்து பரவியது. இதை பார்த்த சுற்றுலா பயணிகள் வனத்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.
தீ விபத்து
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் அந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 15-க்கும் அதிகமான ஊழியர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பல மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் காட்டுத்தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் 10-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வனப்பகுதி நாசமானது. அதில் இருந்த அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள், கொடிகளும் நாசமானதாக கூறப்படுகிறது. மேலும் பறவைகள், சிறிய விலங்குகளும் தீயில் கருகி செத்ததாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், சிகரெட் பிடித்து யாரேனும் தீைய அணைக்காமல் வனப்பகுதியில் வீசியிருக்கலாம் என்றும், காய்ந்த இலை சருகில் அந்த சிகரெட் தனல் பட்டு தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. இதுபற்றி வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சுற்றுலா பயணிகளுக்கு தடை
இதற்கிடையில் இந்த தீ விபத்தை தொடர்ந்து சார்மடி மலைப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் வாகனங்களில் செல்பவர்களையும் வனத்துறை அதிகாரிகள் தீயை அணைக்கும் வரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் மலைப்பாதையில் சிறிது நேரம் பரபரப்பு
ஏற்பட்டது.
மேலும் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. தீ அணைக்கப்பட்ட பின்னர் போக்குவரத்து நெரிசல்
சீரானது.