காஷ்மீரி பண்டிட்டுகள் மீது மீண்டும் பயங்கரவாத தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு


காஷ்மீரி பண்டிட்டுகள் மீது மீண்டும் பயங்கரவாத தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 16 Aug 2022 8:39 AM GMT (Updated: 16 Aug 2022 8:43 AM GMT)

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் காஷ்மீரி பண்டிட் ஒருவர் உயிரிழந்து உள்ளார். அவரது சகோதரர் காயமடைந்து உள்ளார்.

ஜம்மு,



ஜம்மு மற்றும் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு மூன்றாண்டுகள் ஆன நிலையில், நடப்பு ஆண்டில் காஷ்மீரி பண்டிட்டுகள் மீது நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

இதனை தொடர்ந்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியில் இருந்த காஷ்மீரி பண்டிட்டுகள் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர். தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து, சமீப நாட்களாக பாதுகாப்பு படையினர் அதிரடி வேட்டை நடத்தி வருகின்றனர். இதில், காஷ்மீரில் பண்டிட்டுகள் படுகொலை, தொலைக்காட்சி நடிகை படுகொலையுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இதனால், சில நாட்களாக காஷ்மீரில் வன்முறை சம்பவம் குறைந்து இருந்தது. நாட்டில் சுதந்திர தினம் கொண்டாட்டங்கள் நேற்று நடந்து முடிந்த நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் சந்தேகத்திற்குரிய வகையிலான பயங்கரவாதிகளின் தாக்குதலில் காஷ்மீரி பண்டிட் ஒருவர் உயிரிழந்து உள்ளார் என போலீசார் இன்று தெரிவித்து உள்ளனர்.

இந்த தாக்குதலில் அவரது சகோதரர் காயமடைந்து உள்ளார். உயிரிழந்த நபர் சுனில் குமார் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவரது சகோதரர் பிந்து குமார் சிகிச்சை பெற்று வருகிறார். ஆப்பிள் தோட்டத்தில் இருந்த குடிமக்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியை சுற்றி வளைத்து, போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த வாரம் பந்திபோரா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பீகாரை சேர்ந்த தொழிலாளி சுட்டு கொல்லப்பட்டார்.

இதேபோன்று, புல்வாமா மாவட்டத்தில் கடந்த 4-ந்தேதி நடந்த எறிகுண்டு தாக்குதலில் பீகாரை சேர்ந்த தொழிலாளி மற்றும் 2 பேர் காயமடைந்தனர். நடப்பு ஆண்டில் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் 4 பேர் காஷ்மீரை சேராதவர்கள் ஆவர்.


Next Story