பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு - கொல்கத்தாவில் பதுங்கிய வாலிபர் கைது
பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தவர் கொல்கத்தாவில் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:
பெங்களூருவில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக சேக் உசேன் லஸ்கர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் தமிழ்நாடு சேலத்தில் பதுங்கியிருந்த மற்றொரு பயங்கரவாதியான அப்துல் அலி என்ற ஜுபான் என்பவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தார்கள். இந்த நிலையில் ஜுபான் கொடுத்த தகவலின் பேரில் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் பதுங்கி இருந்த மற்றொரு பயங்கரவாதியான அபு சையத் என்பவரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரை பெங்களூரு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான அபு சையத் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெங்களூருவில் மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் ரமன் குப்தா நிருபர்களிடம் கூறுகையில், 'பெங்களூரு மற்றும் சேலத்தில் கைதான பயங்கரவாதிகள் இரண்டு பேருக்கும் அல்கொய்தா அமைப்புடன் தொடர்பு இருந்ததுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த அமைப்புடன் சேர்ந்ததும் தெரியவந்தது.
இவர்களில் ஜுபானுடன் தொடர்பில் இருந்ததுடன் பயங்கரவாத அமைப்பில் சேர திட்டமிட்டு கொல்கத்தாவில் பதுங்கியிருந்த வாலிபரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பெங்களூரு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறோம்' என்றார்.