16வது சுற்று பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வ, முன்னேற்றம் சார்ந்த முறையில் இருந்தது; இந்தியா-சீனா கூட்டறிக்கையில் தகவல்


16வது சுற்று பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வ, முன்னேற்றம் சார்ந்த முறையில் இருந்தது; இந்தியா-சீனா கூட்டறிக்கையில் தகவல்
x

இந்தியா மற்றும் சீனா இடையே நடந்த தளபதிகள் மட்டத்திலான 16வது சுற்று பேச்சுவார்த்தை, ஆக்கப்பூர்வ மற்றும் முன்னேற்றம் சார்ந்த முறையில் இருந்தது என இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



புதுடெல்லி,



கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கையால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு காண்பதற்காக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் 15 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக எல்லையில் சில சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை திரும்பப்பெற்றன.

எனினும் டெம்சோக், தேப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் படைகளை வாபஸ் பெற சீனா மறுத்து வருகிறது. இந்த நிலையில் இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 16வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்று கிழமை நடந்தது. இதில் இந்தியா தரப்பில் ராணுவ 14வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் அனிந்தியா சென்குப்தா பங்கேற்றார். பேச்சுவார்த்தையின்போது, கோக்ரா ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் உள்ள ரோந்து புள்ளி 15ல் இருந்து படைகளை திரும்பப்பெறுவதுடன், கிழக்கு லடாக்கில் அமைதியை உறுதிப்படுத்துமாறு சீனாவை இந்தியா வலியுறுத்தும் என இந்த பேச்சுவார்த்தைக்கு முன்பு, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கு லடாக்கில் உள்ள அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதற்காகவும் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்தியா மற்றும் சீனா இடையே நடந்த தளபதிகள் மட்டத்திலான 16வது சுற்று பேச்சுவார்த்தை, ஆக்கப்பூர்வ மற்றும் முன்னேற்றம் சார்ந்த முறையில் இருந்தது என இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

4 மாத இடைவெளிக்கு பின்பு இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு படைகளும் குறைந்தது நவீன ஆயுதங்களுடன் கூடிய தலா 60 ஆயிரம் படை வீரர்களை எல்லையில் குவித்து உள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றநிலை நீடித்தது. இதனை கவனத்தில் கொண்டும், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றது.

கிழக்கு லடாக்கில் தீர்க்கப்படாத நிலையிலுள்ள மீதமுள்ள விவகாரங்களுக்கான தீர்மானம் ஆனது, மேற்கு பிரிவில் உள்ள அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைதி மற்றும் வன்முறையற்ற நிலை மீண்டும் ஏற்படுவதற்கு உதவிபுரியும். இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே தீர்க்கப்படாமல் உள்ள விவகாரங்களை, ராணுவ மற்றும் தூதரக வழிகளில் நெருங்கிய தொடர்புடன் இருப்பது மற்றும் பேச்சுவார்த்தைகளின் வழியே பரஸ்பரம் ஏற்று கொள்ள கூடிய தீர்மானம் ஒன்றை இயற்றி வெகுசீக்கிரத்தில் தீர்வு எட்டப்படும் என இந்தியா மற்றும் சீனா இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story