பாகிஸ்தானை போரில் வீழ்த்திய 51-வது ஆண்டு வெற்றி தினம்..!


பாகிஸ்தானை போரில் வீழ்த்திய 51-வது ஆண்டு வெற்றி தினம்..!
x

பாகிஸ்தான் நாட்டுக்குள்ளேயே சென்று அந்த நாட்டு ராணுவத்தை துவம்சம் செய்த நமது ராணுவ வீரர்களின் துணிச்சல்மிக்க நடவடிக்கை இன்றளவும் உலக நாடுகளாலும் பேசப்பட்டு வருகிறது.

புதுடெல்லி,

முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் என இந்த பூமி பந்தை உலுக்கிய எத்தனையோ போர்கள் நடந்திருந்தாலும், வெறும் 13 நாட்களிலேயே ஒரு போரை முடிவுக்கு கொண்டுவந்து, தனி நாட்டை உதயமாக்கி சரித்திரத்தில் முத்திரை பதித்த பெருமை இந்தியாவையே சாரும். பாகிஸ்தான் நாட்டுக்குள்ளேயே சென்று அந்த நாட்டு ராணுவத்தை துவம்சம் செய்த நமது ராணுவ வீரர்களின் துணிச்சல்மிக்க நடவடிக்கை இன்றளவும் உலக நாடுகளாலும் பேசப்பட்டு வருகிறது.

1971-ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ந் தேதி 'விஜய் திவஸ்' (வெற்றி தினம்) கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில், இந்தியா பாகிஸ்தானை போரில் வீழ்த்தி இன்றுடன் 51 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. வங்காள தேசம் என்ற புதிய சுதந்திர தேசம் உருவாக வழிவகுத்ததும் இந்த வரலாற்று சிறப்புமிக்க போர்தான்.

வீரதீரமிக்க அந்த போரின் சிறப்பம்சம் இதோ...

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் தங்களது ஆட்சி அதிகாரம் நிலைத்திருக்க, பல்வேறு சூழ்ச்சிகளை செய்தனர். அதில் ஒன்று வங்கப்பிரிவினை. 1905-ல் வங்காள மாகாணம் மேற்கு வங்காளம், கிழக்கு வங்காளம் என 2 மாகாணங்களாக பிரிக்கப்பட்டது. மேற்கு வங்காளத்தில் இந்துக்களும், கிழக்கு வங்காளத்தில் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக இருந்தனர். ஆங்கிலேயர்களின் இந்த மதரீதியிலான பிரித்தாளும் சூழ்ச்சிக்கு தேசியவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் விளைவாக 1911-ல் 2 மாகாணங்களையும் ஒருங்கிணைந்த வங்காளமாக ஆங்கிலேய அரசு அறிவித்தது. ஆனால் இந்த விவகாரம் இந்திய விடுதலை என்ற ஒற்றை கோரிக்கையுடன் மட்டும் இருந்த தேசியவாதிகளிடம் பிரிவினை விதையை தூவியது. மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா என்று 2 பிரிவாக தேசியவாதிகள் பிரிந்தனர். பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கை வலுவடைந்தது. பாகிஸ்தான் உருவான பிறகே சுதந்திரம் என்பதில் ஜின்னா உறுதியாக இருந்தார். இதையடுத்து இந்தியா விடுதலை அடைவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. இன்றைய பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தான் என்றும், கிழக்கு வங்காளமாக இருந்த பகுதி, கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்காளதேசம்) என்றும் பிரிக்கப்பட்டன.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் என்ற புதிய நாடு பிரிந்து சென்றதில் இருந்தே, ஒரே தேசமாக இருந்தபோதிலும் கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் இடையே சுமுகமான உறவுகள் இல்லை. கிழக்கு பாகிஸ்தானியர்கள் வங்க மொழியை பேசுபவர்களாகவும், மேற்கு பாகிஸ்தானியர்கள் உருது மொழியை பேசுபவர்களாகவும் இருந்ததே இதற்கு காரணம். கிழக்கு பாகிஸ்தானை, மேற்கு பாகிஸ்தான் தொடர்ந்து புறக்கணித்து வந்தது. இதனால், கிழக்கு பாகிஸ்தானில் வசித்து வந்த மக்கள் ஆத்திரமடைந்தனர். எனவே, சொந்த நாட்டுக்குள்ளேயே மேற்கு பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலைப்போரை அவர்கள் முன்னெடுக்க தொடங்கினார்கள்.

மேற்கு பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் கிழக்கு பாகிஸ்தான் ஒடுக்குமுறைக்குள்ளானது. பலர் கொல்லப்பட்டனர். கிழக்கு பாகிஸ்தானுக்கு உதவுமாறு, அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடம், அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் முஜிபுர் ரகுமான் கோரிக்கை விடுத்தார். கிழக்கு பாகிஸ்தானுக்கு இந்தியா உதவும் என்ற செய்தி அறிந்த உடனேயே, இந்திய விமானப்படை தளங்கள் மீது மேற்கு பாகிஸ்தான் தாக்குதல் தொடுத்தது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் உருவாவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

இனப்படுகொலைக்குள்ளான கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு ஆதரவாக இந்தியா களம் இறங்கியதால், 1971-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. ராணுவ தளபதி சாம் மானேக்‌ஷா, விமானப்படை தளபதி ஏர்சீப் மார்ஷல் பி.சி.லால், கடற்படை தளபதி அட்மிரல் நந்தா ஆகியோர் தலைமையிலான இந்திய படைகள் தரைவழி, வான்வழி மற்றும் கடல்வழி என மும்முனை தாக்குதல்களை தொடுத்தது. இந்திய ராணுவம் குண்டு மழை பொழிந்தது. இந்தியாவின் முப்படைகளும், வங்காளதேச விடுதலை ராணுவமான முக்திபாஹினும் மேற்கு பாகிஸ்தானை பந்தாடின.

இறுதியில் டிசம்பர் 16-ந் தேதி அன்று டாக்காவில், பாகிஸ்தானின் கிழக்கு பகுதி ராணுவ தளபதி அமீர் அப்துல்லா கான் நியாஸி தலைமையில் 93 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள், இந்திய ராணுவத்தின் லெப்டினென்ட் ஜெனரல் ஜெக்ஜித்சிங் அரோரா தலைமையிலான கூட்டு படைகளிடம் சரண் அடைந்தனர். இதைத்தொடர்ந்து இந்திரா காந்தி போர் நிறுத்தத்தை அறிவித்தார். 13 நாட்களிலேயே முடிந்த போராக இருந்தாலும் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. போரில் கைப்பற்றிய பகுதிகளை பாகிஸ்தானிடமே திருப்பி கொடுத்து, மனிதாபிமானத்தின் உச்சியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தது இந்தியா. இது உலக அரங்கில் இந்தியாவின் மாண்பை அதிகரிக்கச்செய்தது. இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் துண்டாக பிளந்து, வங்காளதேசம் என்ற தனி நாடு உதயமானது.

1971-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி அன்று வங்காளதேசம் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரையிலும் இந்தியாவுடன், வங்காளதேசம் நட்புறவுடன் உள்ளது. நன்றி உணர்வுடன் இந்தியாவை போற்றி வருகிறது. பிரிவினையை விதைத்த பாகிஸ்தானோ தொடர்ந்து இந்தியாவிடம் எதிரி என்ற போக்கையே கடைப்பிடித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தை மண்ணை கவ்வச்செய்த தினத்தை, அதாவது டிசம்பர் 16-ந் தேதியை வங்காளதேசம் சுதந்திர தினமாகவும், இந்தியா அந்த போரில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் `விஜய் திவஸ்' என்ற பெயரில் வெற்றி தினமாகவும் கொண்டாடுகின்றன.

அந்த வகையில் பாகிஸ்தான் உடனான போரின் வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் போரில் தேசப்பற்று, தீரத்துடன் போரிட்ட இந்திய வீரர்களின் தியாகத்தை போற்றி நம்முடைய நெஞ்சங்களில் ஜோதியாக ஏற்றுவோம். இதுவே நாம் அவர்களுக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாகும்.


Next Story