கெம்பேகவுடா சிலை திறப்பை கட்சி விழா போல் பா.ஜனதா அரசு நடத்துகிறது- டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
கெம்பேகவுடா சிலை திறப்பை கட்சி விழா போல் பா.ஜனதா அரசு நடத்துவதாக டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு; கெம்பேகவுடா சிலை திறப்பை கட்சி விழா போல் பா.ஜனதா அரசு நடத்துவதாக டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தொண்டர்களை அனுப்புகிறோம்
பிரதமர் மோடியின் விழாவுக்கு கல்லூரி மாணவர்களை கட்டாயம் அழைத்துவர வேண்டும் என்று மாநில அரசின் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அதை இந்த அரசு வாபஸ் பெற்றுள்ளது. கல்லூரி மாணவர்களை கட்டாயம் வரவேண்டும் என்று கூறவது வெட்கக்கேடான விஷயம். பா.ஜனதாவுக்கு மக்கள் செல்வாக்கு குறைந்துள்ளது என்பதற்கு இதுவே சாட்சி.
அவர்களுக்கு மக்கள் கூட்டம் வேண்டும் என்றால் நாங்கள் எங்கள் கட்சி தொண்டர்களை அனுப்புகிறோம். ஆனால் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மாணவர்களை அரசு விழாவுக்கு அழைத்து வரக்கூடாது. பெங்களூருவில் சாலை பள்ளங்களில் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து இறந்தனர். அப்போது எல்லாம் அந்த பள்ளங்களை மூடவில்லை.
சாலைகளை சீரமைக்கிறார்கள்
இப்போது பிரதமர் மோடி வருகிறார் என்றதும், சாலைகளை சீரமைக்கிறார்கள். பிரதமர் மோடி கடந்த முறை பெங்களூரு வந்தபோது போடப்பட்ட தார் சாலைகள் சில நாட்களிலேயே சேதம் அடைந்தது. அரசு பணத்தில் கெம்பேகவுடா சிலை அமைத்தது பெரிய குற்றம். விமான நிலைய நிறுவனத்திற்கு கர்நாடக அரசு ரூ.6 லட்சம் செலவில் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது. அதனால் அந்த நிறுவனம் தனது சொந்த செலவில் கெம்பேகவுடா சிலை அமைத்திருக்க வேண்டும்.
இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தான் கூற வேண்டும். கெம்பேகவுடா சிலை திறப்பு விழாவை கட்சி விழாவை போல் பா.ஜனதா அரசு நடத்துகிறது. நாடாளுமன்ற வளாகம், விதான சவுதா வளாகத்திலும் கெம்பேகவுடா சிலை அமைக்க வேண்டும். சித்தராமையா குறித்து சிலர் தவறான முறையில் ரகசியமாக பேசியுள்ளனர். அவரது கவுரவத்தை பாழாக்க வேண்டும் என்று சிலர் சதி செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.