சட்டவிரோத கடன் செயலிகளை ஒடுக்க மத்திய அரசு முடிவு
ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்படும் கடன் செயலிகள் மட்டுமே இனி ஆப் ஸ்டோரில் இருக்க அனுமதிக்கப்படும்.
புதுடெல்லி,
நவீன காலத்தில் செல்போன் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. செல்போன் மூலமாக கடன் பெறுவதற்காக பல புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த செயலிகள் ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல், புதிது புதிதாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபற்றிய விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. கடனை திருப்பி செலுத்த தாமதப்படுத்துபவர்களை பற்றிய விவரங்களையும், புகைப்படங்களையும் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்வது, கடன் பெற்றவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தவறாக பேசுவது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, சம்பந்தப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு செல்கின்றனர். இவர்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயலி மூலம் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சட்டவிரோத கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்ற புகார் தொடர்ந்து வருகிறது. அதன் அடிப்படையிலே இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் உயர் மட்ட கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கிச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு மத்திய அரசு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பங்குபெற்றார்கள் . அந்த கூட்டத்தின் இறுதியில் சட்டவிரோத கடன் செயலிகளை தடை செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்படும் கடன் செயலிகள் மட்டுமே இனி ஆப் ஸ்டோரில் இருக்க அனுமதிக்கப்படும்.என்று தகவல் வெளியாகியுள்ளது.