பெங்களூருவில் மழை பாதித்த பகுதிகளில் மாநகராட்சி தலைமை கமிஷனர் நள்ளிரவில் ஆய்வு
பெங்களூருவில் மழை பாதித்த பகுதிகளில் நள்ளிரவில் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் ஆய்வு நடத்தினார். சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
நள்ளிரவில் தலைமை கமிஷனர் ஆய்வு
பெங்களூருவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதுபோல், நேற்று முன்தினம் இரவும் நகரின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானாா்கள். இந்த நிலையில், பெங்களூருவில் மழை பெய்து கொண்டிருந்த போதே நேற்று முன்தினம் நள்ளிரவு, மழையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நேரில் ஆய்வு நடத்தினார்.
அதன்படி, ஹெப்பால் ஜங்ஷனுக்கு சென்று அவர் பார்வையிட்டார். அப்போது மழையால் ஹெப்பால் ஜங்ஷனில் இருந்து எஸ்டீம் மாலில் தொடங்கி கே.ஆர்.புரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஹெப்பால் ஜங்ஷனில் இருந்து கே.ஆர்.புரம் செல்லும் சாலை மற்றும் பல்லாரி சாலையை உடனடியாக விரிவாக்கம் செய்யும் பணிகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு, தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் உத்தரவிட்டார்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
அத்துடன் சாலையின் இருபுறங்களிலும் தெரு மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படியும், பாதசாரிகள் நடந்து செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும்படியும் அவர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு வசதியாகவும், மழை நீர் தேங்கி நிற்காமல் இருக்கவும் உயரமான நடைபாதை அமைக்கும் படியும், நடைபாதையில் இரும்பு கம்பிகளை வைக்கவும் அதிகாரிகளுக்கு துஷார் கிரிநாத் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்க, பெரிய அளவிலான துவாரம் அமைக்கும்படியும் அவர் கூறினார்.
பின்னர் இப்லூரு ஜங்ஷன், ஜிடி மர ஜங்ஷன், சாரக்கி ஜங்ஷன், சும்மனஹள்ளி ஜங்ஷன், கொரகுண்டே பாளையா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொட்டும் மழையிலும் தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் ஆய்வு நடத்தினார்.