கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த நிலையிலும் பெங்களூருவில் பத்திரமாக தரையிறங்கிய விமானம்


கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த நிலையிலும்  பெங்களூருவில் பத்திரமாக தரையிறங்கிய விமானம்
x

கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த நிலையிலும் பெங்களூருவில் பத்திரமாக விமானம் தரையிறங்கியது. இதனால் 160 பயணிகள் உயிர் தப்பினர்.

பெங்களூரு: டெல்லியில் இருந்து 160 பயணிகள், விமானிகள் உள்பட 12 சிப்பந்திகளுடன் ஏர் ஏசியா விமானம் ஒன்று பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருந்தது. அந்த விமானம் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் வந்த போது விமானத்திற்கும், பெங்களூரு விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் இடையேயான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதன்பின்னர் அந்த விமானத்தை இயக்கிய விமானிகள் பெங்களூரு விமான நிலையத்தின் கோபுரத்தை கண்டறிய மாற்று வழியை பயன்படுத்தினர்.

அதாவது மாற்று வழியின் மூலம் காற்றின் வேகம், வானிலை நிலவரம் ஆகியவை பற்றி விமானிகள் கண்டறிந்தனர். பின்னர் அந்த விமானத்தை பெங்களூரு விமான நிலையத்தில் விமானிகள் பத்திரமாக தரையிறக்கினர். இதனால் அந்த விமானத்தில் பயணித்த 160 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்தது பற்றி மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.


Next Story