ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த பா.ஜனதா மேலிடம்


ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த பா.ஜனதா மேலிடம்
x

‘ஜி20’ மாநாட்டுக்கான ஆயத்த கூட்டத்துக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கே அழைப்பு விடுக்கப்பட்டது.

புதுடெல்லி,

அ.தி.மு.க.வுக்கு தலைமை யார்? என்கிற போட்டி எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இருந்துவரும் நிலையில் 'ஜி20' மாநாட்டுக்கான ஆயத்த கூட்டத்துக்கு அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கே அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் அ.தி.மு.க.வை ஆளும் அதிகாரம் அவருக்கே இருப்பதாக கருதப்படுகிறது. பா.ஜனதா மேலிடமும் அவரை அங்கீகரித்ததாக பார்க்கப்படுகிறது.

டெல்லியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி கூட்டம் முடிந்ததும், இரவிலேயே கோவை திரும்புவதாக இருந்தது. ஆனால் அவர் டெல்லியிலேயே நேற்று இரவு தங்கினார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க அவர் முயற்சி மேற்கொள்வதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதுமட்டுமின்றி அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு அ.தி.மு.க. சட்ட வல்லுனர்கள் டெல்லியில் நேற்று முகாமிட்டு ஆலோசனை நடத்தினார்கள்.

எடப்பாடி பழனிசாமியிடமும் ஆலோசனை நடத்தியுள்ளனர். அடுத்தகட்ட நகர்வுகள் பற்றி சில முக்கிய முடிவுகளை அவர்கள் எடுத்துள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே அமித்ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கப்படாது என தெரிவிக்கப்பட்டால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி சென்னைக்கு புறப்படுவார் எனவும் கூறப்படுகிறது.


Next Story