கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் நாளை கூடுகிறது
கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
பெங்களூரு:
40 சதவீத கமிஷன்
கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை மாதம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு 2 மாதங்கள் தாமதமாக செப்டம்பர் 12-ந் தேதி (நாளை) நடைபெறும் என்று கர்நாடக அரசு அறிவித்தது. கர்நாடகத்தில் 40 சதவீத கமிஷன் விவகாரம் பூதாகரமாக எழுந்தது. அரசு ஒப்பந்ததாரர்களே பகிரங்கமாக இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளனர். அவா்கள் இதுகுறித்து பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதினர். இந்த கமிஷன் விவகாரத்தால் பெலகாவியை சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை செய்து கொண்டார்.
சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு விவகாரத்தில் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் 30-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கல்லூரி ஆசிரியர் நியமன முறைகேடு, லஞ்ச வழக்கில் மாவட்ட கலெக்டரே கைது செய்யப்பட்டது என ஊழல், முறைகேடுகள் குறித்து அதிகமாக பேசப்பட்டது.
வணிக கட்டிடங்கள்
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்து மாநிலத்தில் பல பகுதிகளில் அடுத்தடுத்து வெள்ளம் ஏற்பட்டு பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்டோர் மழை வெள்ளத்திற்கு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தலைநகர் பெங்களூருவில் இம்மாதத்தின் முதல் வாரத்தில் கனமழை கொட்டியது. வரலாறு காணாத மழை பெய்ததால் மகாதேவபுரா, பொம்மனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.
இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்கள் நீரில் மூழ்கின. முக்கியமாக பெல்லந்தூர் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறி அருகில் இருந்த லே-அவுட்டுகளை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இதனால் ஏழை நடுத்தர மக்கள் மட்டுமின்றி விலையுயர்ந்த சொகுசு பங்களாக்களில் வசித்த மக்களும் வீதிக்கு வந்தனர். தங்கும் இடம் மற்றும் உணவுக்கே அவர்கள் கஷ்டப்பட்டனர்.
பல்வேறு பிரச்சினைகள்
பெங்களூரு வெள்ளம் கர்நாடகம் மட்டுமின்றி தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பேசப்பட்டது. ஐ.டி. நிறுவனங்கள் அரசு மீது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தின. இன்னொரு புறம் உணவுத்துறை மந்திரியாக இருந்த உமேஷ்கட்டி கடந்த வாரம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
முதல் நாள் கூட்டத்தில் மறைந்த மந்திரி உமேஷ்கட்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் வேறு அலுவல்கள் இடம் பெறாது. அதைத்தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) சட்டசபை கூட்டத்தொடரின் 2-வது நாள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளது.
ஈத்கா மைதான விவகாரம்
அதாவது பெங்களூரு வெள்ள பாதிப்புகள், 40 சதவீத கமிஷன் விவகாரம், ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் தற்கொலை, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு, கல்லூரி ஆசிரியர் தேர்வு முறைகேடு உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகளாக காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் கர்நாடக பா.ஜனதா அரசை இக்கட்டான நிலைக்கு தள்ள அக்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
மேலும் ஹிஜாப் விவகாரத்தால் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், ஈத்கா மைதான விவகாரம், பாடத்திட்டத்தில் வீரசாவர்க்கர் வரலாற்றை சேர்த்தது தொடர்பான சர்ச்சை போன்ற விஷயங்கள் குறித்தும் பிரச்சினை கிளப்ப எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டி கொண்டு தயாராகியுள்ளன. அதே போல், சட்டத்துறை மந்திரி மாதுசாமி, பேசியதாக வெளியான ஆடியோவில், "நாங்கள் ஆட்சியை நடத்தவில்லை. ஆட்சி நிர்வாகத்தை சமாளித்து வருகிறோம். தேர்தலுக்கு இன்னும் 7, 8 மாதங்கள் உள்ளன. அதனால் ஆட்சியை தள்ளி கொண்டிருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தகுந்த பதிலடி
மாதுசாமியின் இந்த கருத்தை சட்டசபையில் குறிப்பிட்டு அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. பெங்களூருவில் பா.ஜனதாவை சேர்ந்த அரவிந்த் லிம்பாவளி எம்.எல்.ஏ. தனது தொகுதியில் ஆய்வு செய்தபோது, மனு கொடுக்க வந்த பெண்ணிடம் அவர் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட விதம் குறித்தும் பிரச்சினை கிளப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தகுந்த பதிலடி கொடுக்க ஆளும் பா.ஜனதா கட்சி தயாராகி வருகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்களை இந்த கூட்டத்தொடரில் எழுப்ப பா.ஜனதா கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். கர்நாடக மேல்-சபை தலைவர் பதவியை பசவராஜ் ஹொரட்டி ராஜினாமா செய்ததால் அந்த பதவி காலியாக உள்ளது. தற்காலிக மேல்-சபை தலைவராக ரகுநாத்ராவ் மல்காபுரே நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் மேல்-சபை தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
கட்சி மாநாடுகள்
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் ஜனஸ்பந்தனா பெயரில் கட்சியின் மாநாடுகளை நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. மற்றொரு புறம் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ பாதயாத்திரை வருகிற 30-ந் தேதி கர்நாடகத்திற்கு வருகிறது. அதனால் கட்சி கூட்டங்களில் ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பரபரப்பாக உள்ளனார் என்பது குறிப்பிடத்தக்கது.