2 இடங்களில் பெயர்கள் இருந்ததால் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து 6 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம்


2 இடங்களில் பெயர்கள் இருந்ததால்  வாக்காளர்கள் பட்டியலில் இருந்து 6 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம்
x

2 இடங்களில் பெயர்கள் இருந்ததால் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து 6 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம் என்று மாநகராட்சி சிறப்பு கமிஷனர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: பெங்களூருவில் வாக்காளர்களின் தகவல்களை திருடியதுடன், 6 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் உள்ள பல ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அரசு மற்றும் மாநகராட்சி மீது எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். வாக்காளர்களின் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்கியதற்கு, சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் கடும் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ரங்கப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

பெங்களூருவில் 6 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியதற்கும், வாக்காளர்களின் தகவல்களை திருடியதாக குற்றச்சாட்டு கூறும் சிலுமே நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நகரில் உள்ள 28 தொகுதிகளில் உள்ள 6 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது உண்மை தான். ஆனால் அந்த 6 லட்சம் பேரும், இரண்டு இடங்களில் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் கொடுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு நபர் ஒரு இடத்தில் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது. எனவே தான் 6 லட்சம் பேரின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது குறித்து தலைமை கமிஷனர் மற்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story