எதிர்க்கட்சிகளுக்கான இடம் குறைந்து வருகிறது என பேச்சு: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் கருத்து ஏற்புடையது - குமாரசாமி டுவிட்டர் பதிவு
எதிர்க்கட்சிகளுக்கான இடம் குறைந்து வருகிறது என்று பேசிய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் கருத்து ஏற்புடையது என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு:
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பொருளாதார நிபுணர்
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, எதிர்க்கட்சிகள் மற்றும் விசாரணை கைதிகள் குறித்து கூறிய கருத்துகளை நான் ஆதரிக்கிறேன். இதற்காக அவரை பாராட்டுகிறேன். அவர், நாட்டில் எதிர்க்கட்சிகளுக்கான இடம் குறைந்து வருகிறது. விவாதம் நடைபெறாமலேயே மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன என்று பேசியுள்ளார். இதை நான் ஒப்புக்கொள்கிறேன். இதுபற்றி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
நாட்டில் எதிர்க்கட்சிகள் பலவீனம் அடைய காரணம் யார்?. கடந்த 8 ஆண்டுகளாக நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?. இதுகுறித்து கேள்வி எழுப்பினால் தேசத்துரோகம் என்ற பட்டத்தை கட்டுகிறார்கள். நோபல் பரிசு பெற்ற அமர்த்தியாசென்னுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நிபுணர் போன்றோருக்கு இந்த நிலை ஏற்பட்டால் எப்படி?.
அமலாக்கத்துறை
எதிர்க்கட்சி தலைவர்கள் குரல் எழுப்பினால் அமலாக்கத்துறை, வருமான வரி, சி.பி.ஐ. மூலம் மிரட்டுகிறார்கள். நாடாளுமன்றம், சட்டசபைகளில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெறவில்லை. தலைமை நீதிபதியின் கவலை ஏற்புடையதாக உள்ளது. விசாரணை நடைபெறாத கைதிகள் நீண்ட காலம் சிறையில் அடைக்கப்படுவது குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
நாட்டில் 6.10 லட்சம் பேர் சிறைகளில் உள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் விசாரணை கைதிகள் ஆவார்கள். அவர்களில் நிரபராதிகள் எத்தனை பேர்?. கிரிமினல் நீதி நடைமுறையில் விசாரணை நடைபெறாமல் நீண்ட காலம் சிறையில் அடைப்பது என்பதும் ஒரு தண்டனையே. தலைமை நீதிபதியின் கருத்துகள் பொறுப்பற்ற ஆட்சியின் கண்களை திறக்கட்டும்.
இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.